குளிர்காலம் துவங்கி விட்டாலே பலருக்கும் காய்ச்சல் சளி போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இந்த பருவநிலை மாற்றத்தால் மனிதர்கள் மட்டுமின்றி செல்லப் பிராணிகளும் பாதிக்கக்கூடும். முக்கியமாக குளிர்காலங்களில் வெப்பநிலை அதிக அளவில் குறையும் போது அவைகளுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவற்றில் பொதுவான ஐந்து நோய்களையும், அவற்றிலிருந்து செல்ல பிராணிகளை காப்பதற்கான வழிமுறைகளையும் பற்றி இப்போது பார்ப்போம்.
ஹைபோதெர்மியா (Hypothermia) : செல்லப் பிராணிகள் மிகவும் குறைந்த வெப்ப நிலையில் இருக்கும்போது ஹைபோதெர்மியா தாக்கும் அபாயம் அதிகமாகிறது. இதை உடனடியாக கண்டறிந்து சரி செய்யவில்லை எனில் இவை அவற்றின் உயிருக்கக் கூட ஆபத்தாக மாறிவிடும். உங்கள் செல்லப் பிராணிக்கு அளவுக்கு அதிகமான உடல் நடுக்கம், களைப்பு மற்றும் உங்கள் அசௌகரியமாக உள்ளதை போல் உணர்ந்தால் இவை அனைத்தும் ஹைபோதெர்மியாவின் அறிகுறிகள் ஆகும். மேலும் அவற்றின் வெப்பநிலை அதிக அளவில் குறைவதால் செல்ல பிராணிகளின் மீது போர்வையை போர்த்தி விட்டு அவற்றை கதகதவென்று வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் அவற்றை அழைத்துச் செல்ல வேண்டும்.
மூக்கடைப்பு : அனைத்து விதமான செல்ல பிராணிகளுக்கும் மூக்கடைப்பு என்பது பொதுவாக ஏற்படும் ஒரு வியாதி தான். மேல் சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்றினால் மூக்கடைப்பு உருவாகிறது. கண்ணில் இருந்து நீர் வடிதல், தும்மல், சோர்வு, மூக்கு ஒழுகுதல், இருமல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். உங்கள் செல்லப் பிராணிகளிடம் நீங்கள் இது போன்ற பொதுவான அறிகுறிகளை கண்டால் மூக்கடைப்பை போக்கும் விதமாக சூடான சூப் அல்லது அதற்கு ஈடான வேறேதேனும் கதகதப்பான திரவ உணவுப் பொருளை அவைகளுக்கு அளிக்க வேண்டும். மேலும் அவைகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கொடுத்து முடிந்த அளவு விரைவாக கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
ஃப்ராஸ்ட்பைட் (Frostbite) : மிகவும் குறைந்த வெப்ப நிலையில் செல்லப் பிராணிகள் இருக்கும் போது அவற்றின் உடலில் உள்ள திசுக்களில் பனி கிரிஸ்டல்கள் உருவாகி ஃப்ராஸ்ட்பைட் என்ற நோய்க்கு காரணமாகிறது. செல்ல பிராணியின் உடல் வெப்பநிலை மிக குறைந்த அளவிற்கு செல்லும்போது அவற்றின் மூட்டுக்கள் மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பிக்கும். மேலும் அந்த இடங்களில் நுண்ணிய கிர்ஸ்டல் போன்ற அமைப்புகள் திசுக்களின் மீது உருவாகி அவற்றை சேதம் அடையச் செய்யக்கூடும்.
இவற்றை தடுப்பதற்கு ஃப்ராஸ்ட்பைட் தாக்கிய பகுதிகளின் மீது மிதமான வெந்நீரை அந்த இடங்களில் அப்ளை செய்வதன் மூலம் உருவாகிய பனிக் கிறிஸ்டல்களை உருக வைக்க முடியும். பிறகு கதகதப்பை தரக்கூடிய போர்வைகளை அவற்றின் மீது போர்த்தி விட வேண்டும். உடல் நடுக்கம், மயக்கம் மற்றும் நினைவிழப்பு ஆகியவை ஃப்ராஸ்ட்பைட்டின் அறிகுறிகள் ஆகும். முக்கியமாக குளிர் பிரதேசங்களில் வாழும் செல்லப் பிராணிகளில் இந்த அறிகுறிகள் அதிகமாக காணப்படுகின்றன.
காய்ச்சல் மற்றும் நிமோனியா : நிமோனியா என்பது சுவாசப் பாதையில் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பு ஆகும். காய்ச்சல் மற்றும் நிமோனியா ஆகியவை மிகவும் குட்டியாக உள்ள செல்ல பிராணிகளிலும், வயதான செல்ல பிராணிகளிலும் பொதுவாக தாக்குகிறது. நீண்ட நேரம் குறைந்த வெப்பநிலை உடைய சூழலில் இருப்பதால் விலங்குகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், பசியின்மை, மூக்கிலிருந்து நேர் வடிதல், தும்மல், கண்ணில் இருந்து நீர் வடிதல், இருமல் ஆகியவை காய்ச்சல் மற்றும் நிமோனியாவின் அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் உங்கள் செல்லப் பிராணிகளுக்கு இருப்பதை நீங்கள் கண்டுகொண்டால் உடனடியாக இவற்றை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
கென்னல் கஃப் ( Kennel Cough ) : கென்னல் கஃப் எனப்படும் இந்த கொட்டில் இருமல் பூனைகள் மற்றும் நாய்களின் சுவாசப் பகுதியில் ஏற்படும் தொற்றினால் உண்டாகிறது. இந்த நோய் வருடத்தின் அனைத்து பருவ காலங்களிலும் விலங்குகளை தாக்கினாலும் குளிர்காலங்களில் மட்டும் தான் அதிக செல்ல பிராணிகளை தாக்குகிறது. இந்த நோய் பாதித்த செல்லப் பிராணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில் இவற்றின் இருமலின் மூலம் அந்த வியாதியானது மற்றவருக்கும் பரவக்கூடும். சத்தமான இருமல், கரகரவென்ற குரல், காய்ச்சல், பசியின்மை, தும்மல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.