ஜப்பான் - உலகிலேயே மிகவும் அதிக வயதுடைய முதியோர்கள் வசிக்கும் நாடு என்பதால், ஜப்பானியர்களும், அவர்களின் வாழ்க்கை முறையும் பிற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி என்பதில் எந்த வாதமும் இல்லை. தற்போதைய காலகட்டத்தில், நாம் அனைவரும் தழுவி வாழ்வதற்கு மிகவும் பயனுள்ள சில கருத்துக்கள் மற்றும் தத்துவங்கள் ஜப்பானிய கலாச்சாரத்தில் உள்ளது என்பதிலும் சந்தேகம் வேண்டாம். அப்படியாக, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய 10 ஜப்பானிய கருத்துக்கள் மற்றும் தத்துவங்கள் இதோ..
இக்கிகய் (Ikigai) : "இக்கிகய்" என்ற ஜப்பானியக் கருத்து, வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தை வரையறுத்து நடைமுறைப்படுத்துவதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் ஏன் எழுந்திருக்கிறீர்கள் என்பதற்கான காரணமாகும். ஜப்பானியர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான 'இக்கிகய்' இருப்பதாக நம்புகிறார்கள், மேலும் அதைக் கண்டுபிடிப்பது வாழ்க்கைக்கு திருப்தியையும் அர்த்தத்தையும் கொண்டு வருவதற்கான ஒரு இன்றியமையாத பயணம் என்றும் கருதுகிறார்கள்.
ஓபைடோரி (Oubaitori) : ஜப்பானிய வார்த்தையான "ஓபைடோரி" என்பது தன்னை மற்றவர்களுடன் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது என்பதாகும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், ஒவ்வொரு மரமும் வெவ்வேறு வழியில் வளரும்; ஒவ்வொருவரும் பூக்களும் தத்தம் காலத்திலும் தனிப்பட்ட வழிகளில் மலரும் என்பதே ஓபைடோரி கருத்தின் இரத்தின சுருக்கமாகும்.
கிண்ட்சுகி (Kintsugi) : "கிண்ட்சுகி" என்பது உடைந்த மட்பாண்டங்களை சரிசெய்யும் ஜப்பானிய கலை ஆகும். உடைந்து பின் சரிசெய்யப்பட்ட ஒரு பொருளாக இருந்தாலும் கூட அதன் குறைபாடுகளில் உள்ள அழகை கொண்டாடும் தத்துவமே கிண்ட்சுகி ஆகும். அதாவது நம் அனைவருக்குள்ளும் குறைபாடுகள் உள்ளன, இருப்பினும் நாம் எவ்வளவு அழகானவர்களாக இருக்கிறோம் என்பதை உணர வேண்டும், அவற்றை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கிண்ட்சுகியின் 'கான்செப்ட்' ஆகும்.
வாபி-சபி (Wabi-Sabi) " : வாபி-சபி" என்றால் நிலையற்ற மற்றும் நிறைவற்றவற்றில் அழகைக் கண்டறிவதைக் குறிக்கிறது. இந்த தத்துவம் மூன்று அடிப்படை கோட்பாடுகளை அங்கீகரிக்கிறது: எதுவும் நீடிக்காது, எதுவும் முடிக்கப்படவில்லை மற்றும் எதுவும் சரியானது அல்ல. இதன் கீழ் தனிப்பட்ட முறையில், உங்களின் சொந்த குறைபாடுகளை, மற்றவர்களின் குறைபாடுகளை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இது பரிந்துரைக்கிறது.