

சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை விராட் கோலி தகர்த்து வந்தாலும் ஒரே ஒரு சாதனையை மட்டும் அவரால் முறியடிக்கவே முடியாது என சேவாக் தெரிவித்துள்ளார்.


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை முறியடித்து தன்வசப்படுத்தி உள்ளார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் தகர்க்கவே முடியாது என நினைத்த பல சாதனைகளையும் கோலி முறியடித்துள்ளார். ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலியின் சாதனையை முன்னாள் வீரர்கள் பலர் புகழந்து வருகின்றனர்.


இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் இந்த தலைமுறையின் மிக சிறந்த வீரராக விராட் கோலி திகழ்கிறார். சச்சினின் பல சாதனைகளை விராட் கோலி முறியடித்தாலும் அவரால் முறியடிக்க முடியாத ஒரு சாதனை சச்சின் வசமுள்ளது என கூறியுள்ளார்.


ஒரு நாள் போட்டிகளில் சச்சின் 463 போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் விளாசி , அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 239 போட்டிகளிலேயே 43 சதங்களி விளாசி உள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க அவருக்கு 7 சதங்களே தேவை.


அதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் சச்சின் 51 சதங்கள் அடித்துள்ளார். கோலி 25 சதங்கள் அடித்துள்ளார் என்றாலும் சச்சினின் இந்த சாதனையும் விராட் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் விராட் கோலி மட்டுமல்ல உலகின் எந்தவொரு வீரரும் தகர்க்க முடியாத அரிதான சாதனை சச்சின் வசம் உள்ளது.


சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உச்சத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ரிக்கி பாண்டிங் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் உள்ளார். விராட் கோலி இது வரை 77 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். சச்சினின் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சாதனையை மட்டும் யாராலும் முறியடிக்கவே முடியாது என சேவாக் திட்டவட்டமாக கூறியுள்ளார்.