ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியிலும், திற்பரப்பு நீர்வீழ்ச்சி உட்பட பல்வேறு நீர் நிலைகளில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மறைந்த முன்னோர்களுக்கு பலி தற்ப்பணம் செய்து வருகின்றனர்.இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள குமரி முக்கடல் சங்கமம், குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி உட்பட பிரதான நீர் நிலைகளில் அதி காலை 4 மணி முதல் மக்கள் மறைந்த முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்வானது நடைபெற்று வருகிறது. முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் செய்து புனித நீராட 16 தீர்த்தங்களைக் கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் மக்கள் கூட்டம் அலைமோதியது - கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் அரசு தரப்பில் அனுமதி மறுக்கபட்டதால் இந்த ஆண்டு தர்ப்பணம் செய்து புனித நீராட மக்கள் கூட்டம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிப்பு.
தங்கள் முன்னோர்களை நினைத்து ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய இரு நாட்களில் புனித நீர் நிலைகளுக்கு சென்று அரிசி, தர்ப்பை, எள், உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு தர்ப்பணம் பூஜைகள் செய்து புனித நீராடுவது நம் பாரம்பரிய முறைகளில் ஓன்று. அந்தவகையில் இன்றுஆடி அமாவசையை முன்னிட்டு சரஸ்வதி தீர்தம், விநாயகர் தீர்த்தம், காயத்திரி தீர்த்தம் உள்ளிட்ட 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை முதலே பல்லாயிரகணக்கான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க எள், பச்சரிசி,தர்ப்பை மற்றும் பூக்களினால் பலிகர்ம பூஜை செய்து புனித நீராடினர்..
இந்த நாட்களில் புனித நீர் நிலைகளில் பலிகர்ம பூஜை செய்வதால் மறைந்த தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைவதுடன் தங்களது குடும்பம் எல்லா வளங்களும் பெற்று சிறப்படையும் என்ற நம்பிக்கை தெரிவித்தனர்.மேலும் பலிகர்ம பூஜை செய்த மக்கள் அங்குள்ள குமரி பகவதியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.குழித்துறை நகராட்சி சார்பில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாமிரபரணி ஆற்றில் நீர் குறைவாக இருந்ததால் மாவட்ட நிர்வாகம் நேற்று பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் பெண்களுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆற்றில் ஏராளமான மக்கள் பலி தர்ப்பணம் செய்து புனித நீராடி வருவதால் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் நூற்றுற்றுகணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு தர்ப்பணம் செய்ய வந்து செல்கின்றனர். சுமார் ஒரு லட்சம் பேர் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளும் என குழித்துறை நகராட்சி சார்பில் தெரிவித்தனர்.