கைலாசநாதர் கோவில் : காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் சிறப்பும் புகழும் வாய்ந்ததாகும். இந்த கோவில் 7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் ராஜசிம்மனால் கட்டப்பட்டதாகும். சிற்பமும், இயற்கை வண்ணங்களை கொண்டு வரையப்பட்ட ஓவியத்தையும் கொண்டதாக, வெளிநாட்டவரும் விரும்பிப் பார்க்கும் சுற்றுலா தலமாகத் திகழ்கிறது இந்த கோவில்.
காமாட்சி அம்மன் கோவில்: காஞ்சி மாநகரின் மையப்பகுதியில் 12 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட காமாட்சி அம்மன் போவில் புகழ்மிக்க சக்தி தலமாக இருந்து வருகிறது. இங்கே காமாட்சி அம்மன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். காஞ்சிமாநகரில் அம்மனுக்கு என்று தனி சன்னிதியாக இக்கோயில் மட்டும் திகழ்வதாக போற்றப்படுகிறது.
காஞ்சி சங்கர மடம் : மிகவும் புகழ் வாய்ந்தி காஞ்சி காமகோடி பீடமாகிய சங்கரமடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டு மூலமான்ய சர்வாஜன பீடம் என அழைக்கப்படுகிறது. இத்திருச்சபை 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். இம்மடத்தின் 69 மற்றும் 70 வது மடாதிபதிகள் முறையே ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சங்கர விஜயேந்திர ஸ்வாமிகள் ஆவர்.
ஏகாம்பரநாதர் கோவில்: பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் கோவிலின் கோபுரம் 57 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் இராஜகோபுரம் தென்னிந்தியாவின் மிக உயரமான கோபுரங்ளுள் ஒன்றாகும். இந்த கோவிலில் உள்ள தூண்களும், குளமும், கருவறை சிலையும், அழகே உருவாய் அமைந்துள்ளன. இதேபோல அருகில் உள்ள கச்சபேஸ்பரர் கோவிலும் சிறப்புவாய்ந்ததாகும்.
வைகுண்ட பெருமாள் கோவில்: 8 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நத்திவர்மனால் இக்கோயில் கட்டபப்டட்து. 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்பே வைகுண்டநாதராக பரமபதநாதரும், வைகுண்டவள்ளியாக லட்சுமியும் அருள் புரிகின்றனர். இந்த கோவிலில் உள்ள சிற்பங்கள் மிகவும் புகழ்வாய்நதவை. இங்கே சீனப்பயணி யுவான்சுவாங் சிற்பம், சமணர்கள் கழுவில் ஏற்றப்படும் சிற்பங்கள் என ஏராளமான சிற்பங்கள் உள்ளன.
வரதராஜ பெருமாள் கோவில்: 23 ஏக்கர் நிலப்பரப்பில் 19 கோபுரங்களும் 400 தூண் மண்டபங்களையும் கொண்டு திகழும் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 12 ஆழ்வார்களும் இந்த கோயிலில் விஜயம் செய்து திருமாலை பாடியதாக கூறப்படுகிறது. கலைநயமிக்க சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் நிறைந்த இக்கோயிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் விரும்பி பார்த்து ரசிக்கின்றனர். இந்த கோவிலில் உள்ள தங்க பல்லி மிகவும் பிரபலம். இந்த கோவிலில் இருக்கும் குளத்தில்தான் 40ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வரும் அத்திவரதர் நீருக்குள் இருக்கிறார்.
உலகளந்த பெருமாள் கோவில்: விஷ்ணு பகவானின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதார பிரம்மாண்ட சிற்பத்துடன், ஒருகாலை தூக்கி உலகை அளக்கும் கோலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது உலகளந்த பெருமாள் கோவில். இந்த கோவிலில் மொத்தம் நான்கு திவ்விய தேசங்கள் உள்ளன. திரு ஓரகம், திருநீரகம், திருக்காரவனம் ஆகியவையும் உள்ளன. இது எங்கும் காண முடியாத, ஒரே கோயிலில் நான்கு திவ்விய தேசங்கள் அமைந்திருப்பது தனித்துவம் வாய்ந்த அம்சமாகும்.
மசூதிகள்: காஞ்சிமாநகரில் இரண்டு முக்கிய மசூதிகள் அமைந்துள்ளன. இம்மசூதிகள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நவாப்களால் கட்டப்பட்டுள்ளது. இம்மசூதிகள் ஜமா மஸ்ஜித் என அழைக்கப்படுகிறது. மசூதியின் உள்ளே 108 சிவலிங்கம் அமைக்கப்பட்டு மத ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறது. புகழ் பெற்ற வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு அருகில் ஒரு மசூதி அமைந்துள்ளது. வைகுண்ட பெருமாள் கோயிலுக்கும் மசூதிக்கும் ஒரே குளம் பொதுவாக அமையப்பெற்று மத நல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மேலும் வரதராஜ பெருமான் திருக்கோயில் பிரம்மோற்வத் திருவிழாவில் இஸ்லாமியர்களும் இடம் பெறுவது தனிச் சிறப்பாகும்.
குமரக்கோட்டம் முருகன் கோவில் : காஞ்சிபுரத்தில் காஞ்சி மடத்திற்கு அருகே, அந்துள்ள குமரக்கோட்டத்தில் வீற்றிருக்கும் முருக பெருமானை போற்றியே கந்தபுராணத்தை கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றினார். கிருத்திகை தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கந்த சஷ்டி திருவிழாவும், வைகாசி விசாகமும் பிரசித்திப்பெற்ற விழாக்களாக இங்கு கொண்டாடப்படுகிறது.
சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம் (நாட்டுப்புற கலைகள்) : 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாட்டுப்புற கலைகள் சர் சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பழங்காலப் பொருட்களான பாரம்பரிய ஓவியம், பழங்கால பாம் இலைகள், இசைக்கருவிகள், பூஜைப்பொருட்கள், விளக்குகள், கற்சிலைகள், பாரம்பரிய உடை அலங்காரம், அலங்கார விளக்குகள், பட்டு பருத்தி மற்றும் கைத்தறி உடைகள், நகை மற்றும் உள்நாட்டு புத்தகங்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அருவில் அமைந்துள்ளது.
அறிஞர் அண்ணா இல்லம்: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை அவர்களது இல்லம், அவரின் மறைவிற்கு பின்னர் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இங்கு அவரது சிலை, புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ளது.