தென்னிந்திய கட்டிடக்கலை வரலாற்றில், காலத்தால் அழியாமல் நீடிக்கும் கட்டடங்களாகக் கற்கோயில்களை அமைத்துத் தென்னிந்திய கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்கள் தொடக்க காலத்தில், குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்தனர். தொடர்ந்து கட்டுமானக் கோவில்களை அமைப்பதிலும் பல்லவர்கள் முன்னோடிகளாக திகழ்ந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலை கி.பி. 700ஆம் ஆண்டளவில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டது. இந்த கோவில் தென்னிந்திய கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது காஞ்சிபுரத்திலுள்ள மிக்க பழைமை மிக்க கோயிலாகும். இதைக் கல்வெட்டு ஆதாரங்கள் ‘இராஜசிம்மேச்சரம்’ எனக் கூறுகின்றன