துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ஆயிரக் கணக்கானோரின் உயிரை காவு வாங்கியுள்ளது. 1939 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தப்பகுதியில் நிகழ்ந்துள்ள மிக மோசமான நிலநடுக்கம் என்கிறார்கள் புவியியல் வல்லுநர்கள். ஏன் இந்த நிலநடுக்கம் இவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது என்கிற விபரத்தையும் வெளியிட்டுள்ளனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் . முதலில் நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது என்ற விபரத்தை பார்க்கலாம்.
பூமிக்கடியில் இருக்கும் நிலத்தட்டுக்கள் நிலையானவை அல்ல. அவை அடிக்கடி நகர்ந்து கொண்டே இருக்கும். பூமியின் ஓடுபோன்ற பகுதி டெக்டோனிக் தட்டுகளாக உடைகிறது. அவை தொடர்ந்து நகர்ந்து மெதுவாக,அடிக்கடி உராய்வதன் காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக் கொள்கின்றன. விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, பூமியின் மேல்ஓடு வழியாக செல்லும் அலைகளில் சக்தி வெளிப்படுவதே நிலநடுக்கம்.
தற்போது நிழ்ந்த நில அதிர்வு பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. அதற்கும் குறைவான ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தால் இன்னும் மிக மிக மோசமான சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார் இங்கிலாந்து பல்கலைகழகத்தின் புவி மேற்பரப்பு ஆய்வியல் வல்லுநரான டேவிட் ரோத்தேரி.
நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு ஏறத்தாழ பதினோரு நிமிடங்களில் 6.7 ரிக்டர் அளவு நில அதிர்வும், அதில் இருந்து சில மணி நேரங்களில் 7.5 ரிக்டர் அளவு நில அதிர்வும், பிற்பகலில் மீண்டும் 6.0ரிக்டர் அளவு நில அதிர்வும் இதே பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்த நில நகர்வு இன்னும் தொடரும் என்றும் இந்த நகர்வு அருகில் இருக்கும் மற்ற புவியடுக்குகளுக்கும் பரவும் என்றும் எசச்ரிக்கிறார் ரோஜர் மஸ்ஸூன் என்ற புவி அறிவியல் ஆய்வாளர்.
அப்படி நடந்தால் ஆயிரக் கணக்கில் அல்ல பத்தாயிரக் கணக்கில் உயிர்பலி நிகழ வாய்ப்பிருப்பதாகவும் மஸ்ஸூன் எச்சரிக்கிறார். ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு நம் அண்டை நாடான நேபாளத்தில் ஒரு மோசமான நில நடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 9ஆயிரம் உயிர்களை காவு வாங்கியது. அந்த நிலநடுக்கமும் ரிக்டர் அளவு கோளில் 7.8 ஆகத் தான் பதிவாகியிருந்தது. எனவே இந்த அளவு நிலநடுக்கம் மிக மோசமாகத்தான் பார்க்கப்படுகிறது. அதிலும் துருக்கியில் தொடர் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக் கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.