ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களும் தாலிபான்கள் கட்டுக்குள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் பஞ்ஷிர் எனும் மாகாணத்தை மட்டும் மக்கள் எழுச்சியாக தாலிபான்களிடம் இருந்து கைப்பற்றி அவர்களை ஓட விட்டனர். பஞ்ஷிர் போராளிகள். தாலிபான்கள் மட்டுமல்ல சோவியத் யூனியன் படையெடுப்பின் போதும் கூட இந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்கை யாராலும் கைப்பற்ற முடியாத பெருமையுடன் இருந்து வருகிறது.
இந்நிலையில், பஞ்ஷிர் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் கடந்த 3 தினங்களாக பெருமளவில் படைகளை குவித்த தாலிபான்கள், பஞ்ஷிர் போராளிகளுடன் சண்டையை தொடங்கினர். இருப்பினும் புவியியல் ரீதியாக பஞ்ஷிர் மலைப்பாங்கான பகுதி என்பதால் உள்ளூர்வாசிகள் அந்தப் பகுதியின் ஏகபோக கட்டுப்பாட்டை கைக்குள் வைத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும், பல வழிகளில் தாலிபான்கள் அளிக்கும் சவால்களை முறியடித்து வருகின்றனர் பஞ்ஷிர் போராளிகள். அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 115 தாலிபான்கள், பஞ்ஷிர் போராளிகளால் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பலரை உயிருடன் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது. இத்துடன் தாலிபான்கள் கொண்டு வந்த பீரங்கி போன்ற பெரிய அளவிலான தளவாடங்களையும் பஞ்ஷிர் போராளிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.