குழந்தையின்மை சிகிச்சை குறித்து விரிவான தகவல்களை தெரிந்து வைத்திருப்போருக்கு ‘விந்தணு தானம்’ அல்லது உயிரணு தானம் என்ற வார்த்தை ஒன்றும் புதிதல்ல. பெண்களுக்கு குழந்தை பேறு இல்லாதபோது அல்லது தானே நேரடியாக குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதபோது, அவர்களுடைய கருமுட்டையை, ஆண் துணையின் கருமுட்டையுடன் இணைத்து, பின்னர் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை தற்போது பல பிரபலங்கள் கடைப்பிடிப்பதால், அதுகுறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால், விந்தணு தானம் கொஞ்சம் அரிதாக நடக்கின்ற விஷயம் தான். ஆண் துணைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன் இல்லாத போது, வேறொரு ஆணிடம் இருந்து விந்தணுவை தானமாக பெற்று பெண்கள் கருத்தரிக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆணிடம் இருந்து தானமாக பெறப்பட்ட விந்தணுவை ஊசி அல்லது கேத்தெடர் மூலமாக பெண்ணின் உடலில் செலுத்தி, அந்தப் பெண்ணுக்கு கருத்தரிக்கும் சிகிச்சையை மருத்துவர் மேற்கொள்வார்.
பிறக்கும் குழந்தைக்கு மரபு ரீதியாக அல்லது சட்ட ரீதியாக தந்தை என்று உரிமை கோருவதோ அல்லது வேறு வகைகளில் அந்தக் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்கும் உரிமையோ, விந்தணு கொடையாளருக்கு கிடையாது. இதனால் தான் பெரும்பாலான விந்தணு தான மையங்களில், நீங்கள் விந்தணு தானம் செய்தாலும், உங்களுடைய விந்தணு மூலமாக கருத்தரிக்கப் போகிறவர் யார் என்ற விவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
அதே சமயம், மருத்துவர் ரீதியாக நீங்கள் தகுதியான நபரா என்பதை கண்டறிய மரபணு பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகள் செய்யப்படும். உங்களின் முழுமையான விவரங்கள் சேகரிக்கப்படும். இருப்பினும், ஒரு சில விந்தணு தான மையங்களில் தானம் பெற இருப்பவர் குறித்த தகவல்களை கொடையாளருடன் பகிர்ந்து கொள்கின்றனர். இத்தகைய தருணங்களில் குழந்தை மற்றும் அதன் குடும்பத்தினரோடு கொடையாளர் ஓரளவுக்கு தொடர்பில் இருக்க முடியும்.
உதாரணத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ல் கார்டி என்ற நபர் தொழில்முறை விந்தணு கொடையாளராக செயல்பட்டு வருகிறார். இவர் திருமணம் செய்யாமல் விந்தணுவை தானமாக வழங்கியதன் மூலமாக 57 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். ஒரு சிலருடன் இலவசமாக இவர் உடலுறவு வைத்தும் விந்து தானம் செய்துள்ளார். ஆனாலும் தனக்கென நிரந்தரமாக ஒரு வாழ்க்கை துணை தேவை என்று எண்ணிய இவர், அதுகுறித்து இன்ஸ்டாகிராம் மூலமாக அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால், கெய்ல் கார்டியை தொடர்பு கொள்ளும் பெண்கள் பலரும் விந்தணு தானம் பெற விரும்புபவர்களாக இருக்கின்றனர். ஒருவர் கூட இவருடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவிப்பவராக இல்லை. பாலிவுட் திரையுலகில், ‘விக்கி டோனர்’ என்றொரு படம் வெளிவந்தது. அந்தப் படத்தின் நாயகன் விந்தணு கொடையாளராக இருப்பார். அவரது வாழ்க்கை போலவே கெய்ல் கார்டியின் வாழ்க்கை மாறியிருக்கிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் விந்தணு செய்யத் தொடங்கிய 2 ஆண்டுகளில் மிகுந்த கவனம் பெற தொடங்கினேன். அந்த சமயத்தில் நான் அதிகளவு தானம் செய்து வந்தேன். பல தானங்களில் வெற்றிகரமான கர்ப்பம் நிகழ்ந்துள்ளது. ஆனால், நீண்டகால பந்தத்தை ஏற்படுத்துவது சிரமமானதாக மாறியுள்ளது’’ என்றார்.