அமெரிக்காவில் பெய்து வரும் கனமழையால், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தண்ணீர் தேங்கியது. வாஷிங்டனில் பெய்து வரும் மழைக்கு, அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையும் தப்பவில்லை. வெள்ளை மாளிகையின் தரைதளத்தில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால், அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா வரி விதிப்பதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதிப்பதை இந்தியா வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் இந்த நடவடிக்கையை நீண்ட காலத்துக்கு பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவில் 2 மணி நேரத்தில் இடைவிடாது 3, 270 தண்டால் எடுத்த 6 வயது சிறுவனுக்கு அடுக்குமாடி வீடு ஒன்று பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. நோவி ரெடான்ட் பகுதியைச் சேர்ந்த இப்ராகிம் லினோவ் என்ற அந்த சிறுவன், சாதனைக்காக 4, 445 தண்டால் எடுத்தார். அதில், 3, 270 தண்டால்களை இடைவெளியின்றி 2 மணி நேரத்தில் எடுத்து பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார் அந்த சிறுவன். அதனைக் கண்ட அப்பகுதி விளையாட்டு அமைப்பு ஒன்று, அந்த சிறுவனின் குடும்பத்திற்கு வீடு ஒன்றை பரிசாக அளித்துள்ளது.
சீனாவில் பெய்துவரும் தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் ((Guangxi Zhuang)) தன்னாட்சிப் பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்ததால், அந்தப் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை, ரப்பர் படகுகள் மூலம் தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைத்தனர்.
சீனாவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் ஸ்கிப்பிங் பயிற்சியில் புதிய சாதனை படைத்துள்ளார். தெற்கு சீனாவில் உள்ள Guangzhou பகுதியைச் சேர்ந்த மாணவன், 30 வினாடிகளில் 256 முறை ஸ்கிப்பிங் ஆடி சாதனை படைத்துள்ளார். மின்னல் வேகத்தில் அவர் ஸ்கிப்பிங் ஆடும் காட்சி, காண்போரின் விழிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.