பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா யூசப்சாயி (Malala Yousafzai). பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்ததற்காக கடந்த 2012ம் ஆண்டு பள்ளியில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்த மலாலா மீது தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். முகம் உள்ளிட்ட பாகங்களில் படுகாயம் அடைந்த மலாலா பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் மலாலா மேலும் தீவிரமாக இயங்கத் தொடங்கினார். பிரிட்டனின் பர்மிங்காம் (Birmingham) பகுதியில் குடியேறிய மலாலா பெண் குழந்தைகள் கல்வி, சமூக சார்ந்த பிரச்சனைகளுக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். மலாலாவின் சேவையை பாராட்டி 2014ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற சிறப்பையும் மலாலா பெற்றார்.
ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான் கைகளுக்கு சென்ற பின்னர், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாகவும் தாலிபான்களுக்கு எதிராக உலக நாடுகள் செயலாற்ற வேண்டும் என்றும் மலாலா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், மலாலா யூசப்சாயி திருமணம் மிகவும் எளிய முறையில் பர்மிங்காமில் நடைபெற்றது. அசர் என்பவரை மலாலா திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ள மலாலா, இன்று என் வாழ்வில் மிகவும் பொன்னான நாள். வாழ்க்கையில் இணையராக இருக்க நானும் அசரும் திருமணம் செய்துகொண்டோம். பர்மிங்காமில் எங்கள் குடும்ப நபர்கள் உடன் மிக எளிய முறையில் எங்கள் நிக்கா( திருமணம்) நடைபெற்றது. உங்களின் பிரார்த்தனைகளை எங்களுக்கு அனுப்புங்கள். எதிர்வரும் பயணத்தில் ஒன்றாக பயணிக்க ஆர்வமுடம் உள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார். மலாலா- அசர் தம்பதியினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.