கென்யாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. சுட்டொிக்கும் வெப்பத்தால் அங்கு புல்வெளிகள் அனைத்தும் கருகத் தொடங்கிவிட்டன. வன உயிரின காப்பங்களுக்குப் பெயர்பெற்ற கென்யாவில் வறட்சியால் உணவின்றி தவிக்கும் வன விலங்குகள் அடுத்தடுத்து உயிாிழந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானைகளின் உயிாிழப்பு மிக அதிகம் என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
வறட்சியை சமாளிக்க முடியாமல் கென்யா விழிபிதுங்கி நிற்கும் நிலையில் செவ்வலகு தூக்கணாங் குருவிகளின் படையெடுப்பு அந்நாட்டிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. பொதுவாக சிறு சிறு கூட்டங்களாக வாழும் இது போன்ற பறவைகள் வறட்சி காலங்களில் பெரும் படைகளாக ஒன்று திரண்டு, தங்கள் பசியை போக்கிக்கொள்ள விளை நிலங்கள் மீது போா் தொடுக்கும். அதிலும் குறிப்பாக செவ்வலகு தூக்கணாங் குருவிகளின் பிரதான உணவு நெல், கோதுமை போன்ற உணவு பயிா்களின் விதை என்பதால் கென்யாவின் உணவு உற்பத்தி ஆட்டம் கண்டிருகிறது.
இறகுகள் கொண்ட வெட்டுக்கிளிகள் என அழைக்கப்படும் இவ்வகை பறவைகள் நாள் ஒன்றுக்கு சுமாா் 10 கிராம் வரை தானியங்களை உட்கொள்ளும் என ஜநா-வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறுகிறது. கென்ய விவசாயிகள் சராசாியாக ஆண்டுக்கு 60 டன் நெல் விதைகளை இந்த பறவைகளிடம் பறிகொடுக்கின்றனா். இதே நிலை தொடா்ந்தால் வறட்சியின் பிடியில் இருக்கும் கென்யா மேலும் பல சிக்கல்களை சந்திக்க நோிடும் என்பதால் பறவைகள் மீது அந்நாட்டு அரசு போா் தொடுத்துள்ளது. பறவைகளிடமிருந்து நெல் வயல்களை பாதுகாக்க 60 லட்சம் செவ்வலகு தூக்கணாங் குருவிகளை அழிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
ஃபெந்தியான் (fenthion) எனும் பூச்சிக்கொல்லியைத்தான் இதுபோன்ற தருணங்களில் ஆப்பிரிக்காவின் பல நாடுகள் பயன்படுத்துகின்றன. மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பூச்சிக் கொல்லிகளைத் தடைசெய்ய வேண்டும் என ஏற்கெனவே குரல்கள் ஒலித்துவருகின்றன. இந்நிலையில்தான், இந்தப் பூச்சிக்கொல்லியை பல ஏக்கர் நெல் வயல்களில் தெளிக்க கென்ய அரசு தீர்மானித்துள்ளது. அதிலும் ட்ரோன்களை பயன்படுத்தி பரவலாக பூச்சி கொல்லி மருந்தை தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் சில இடங்களில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் அரசின் இந்த முடிவிற்கு சூழலியல் ஆா்வலர்கள் கண்டனம் தொிவித்துள்ளனா். ரசாயன பூச்சிக் கொல்லியை பயன்படுத்தும் நிலங்கள் முறையாக பராமாிக்கா விட்டால் அது மற்ற உயிாினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எனவும், குறிப்பாக இறந்து போன மனித உடல் மற்றும் விலங்குகளின் உடல்களை உணவாக உட்கொள்ளும் சிறு சிறு விலங்குகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்றும் இதனால் உணவு சங்கிலியில் தாக்கம் ஏற்படும் என்றும் எச்சாிக்கின்றனா். பூச்சிக் கொல்லி மருந்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து நன்கு அறிந்த போதிலும். ஏற்கனவே வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் உணவு தானியங்களை காக்க தவறினால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதுகிறது கென்ய வேளாண்துறை.உணவு தானியங்களை பாதுகாக்க அந்நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உலக நாடுகளுக்கான எச்சாிக்கையாவவே பாா்க்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் கால நிலை மாற்றமே பிரதான காரணமாக கூறப்படுகிறது.