ஜெர்மனி நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக ஹம்பர்க் இருந்து வருகிறது. இதையடுத்து அங்குள்ள ஜெகோவா சாட்சி பிரார்த்தனை மையத்தில் நேற்று இரவு நேரத்தில் வெடி சத்தம் பயங்கரமாக கேட்டதாக அருகில் வசித்த குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர். இந்த சத்தத்தினால் தேவாலயத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
பின்னர் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.அப்போது துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் போலீசாரைக் கண்டதும் தேவாலயத்தின் மேல்மாடிக்கு ஓடியுள்ளார். மேல் மாடிக்கு சென்றதும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த பெண் சிசு என ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் இதே தேவாலயத்தில் உறுப்பினராக இருந்த 35 வயதுள்ள நபர் எனத் தெரியவந்துள்ளது. ஆனால் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற தேவாயலம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது தேவாலயத்தில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்ததால் அதிக உயிர் பலி தவிர்க்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்ற துப்பாக்கியாகும்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது, பக்கத்து வீட்டில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில் தேவாலயத்தின் வெளியில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக அந்த நபர் துப்பாக்கியால் சுடுவது பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே போல் ஜெர்மனியில் பல்வேறு சமயங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதையத்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, துப்பாக்கி குண்டுகள் நிரப்பப்பட்ட 15 மேகசின்கள் இருந்துள்ளன. அவற்றைக் கைப்பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ள ஹம்பர்க் நகர மேயர், இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும் கூறினார்
கடந்த சில ஆண்டுகளாக இதே போல் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அதிகாரிகளும், காவல்துறையினரும் அதிர்ச்சியில் உள்ளனர். துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தீவிரமாக்கப்படுவதோடு, கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.