அண்டார்டிகாவில் உள்ள பனிமலைகள், பனிப்பாறைகள் எல்லாம் வேகமாக உருகி வரும் செய்திகள் வந்துகொண்டு இருக்க வெனிஸ் நகரத்தில் உள்ள ஒரு ஆறு வறண்டு போய் கிடக்கிறது. சாலைகளை விட நதி போக்குவரத்தையே அதிகம் சார்ந்து இயங்கிக்கொண்டிருந்த நகரத்தில் இப்போது சிறு கால்வாய்கள் அனைத்தும் வறண்டு கிடப்பதால், நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்துள்ளன.
ஐரோப்பிய பிரியர்களுக்கு இத்தாலி ஒரு சொர்க்க பூமி. அதுவும் வடக்கு இத்தாலியின் வெனிட்டோ பிராந்தியத்தின் தலைநகரான வெனிஸ், அட்ரியாடிக் கடலில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சிறிய தீவுகளில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சாலைகள் இல்லை, கால்வாய்கள் மட்டுமே பிரதான போக்குவரத்துக்கு வழியாக உள்ளன. தினசரி அலுவலகம் செல்பவர்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அனைவரும் இந்த கால்வாய் வழியாகத்தான் பயணிப்பார்கள்.
ஆனால் வடமேற்கில் உள்ள ஆல்ப்ஸ் மலையிலிருந்து அட்ரியாடிக் வரை ஓடும் இத்தாலியின் மிக நீளமான நதியான போ , இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழக்கத்தை விட 61% குறைவான பனிப்பொழிவையே பெற்றுள்ளது. அதனால் பொதுவாக முதன்மையான கவலையாக வெள்ளம் இருக்கும் வெனிஸ் நகரம், வழக்கத்திற்கு மாறாக நதியோட்டத்தில் குறைந்த அலைகளை எதிர்கொள்வதால், வறட்சியை எதிர்கொண்டு வருகிறது.
விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்களின் கூற்றுப்படி, வெனிஸில் உள்ள பிரச்சனைகள் மழையின்மை, வறண்ட குளிர்கால வானிலை, உயர் அழுத்த அமைப்பு, முழு நிலவு மற்றும் கடல் நீரோட்டங்கள் போன்ற காரணிகளின் கலவையால் நிகழ்வதாக தெரிவிக்கின்றனர். ஆல்ப்ஸ் மலையின் இயல்பான பனிப்பொழிவு குறைவால் நீர்வரத்து குறைந்து கால்வாய்கள் வறண்டு விட்டதாக கூறுகின்றனர்.
2020-2021 குளிர்காலத்தில் இருந்து அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை சூழ்நிலை தற்போது மேலும் மோசம் அடைந்து வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த ஜூலை மாதம், இத்தாலி போ நதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியது. காரணம் அந்த வறட்சியால் நாட்டின் விவசாய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டு மட்டும் 70 ஆண்டுகளாக இத்தாலி சந்தித்திராத மோசமான வறட்சியை சந்தித்தது.” இத்தாலியின் வறட்சி என்பது கடந்த சில ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது. வடமேற்கு பிராந்தியங்களில் 500 மில்லி மீட்டர்கள் மழை பெய்தால் மட்டுமே குறைந்தபட்ச சாதாரண நிலையை மீட்டெடுக்க முடியும். குறைந்தது 50 நாட்கள் மழை தேவை என்று இத்தாலிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான CNR இன் காலநிலை நிபுணர் மஸ்ஸிமில்லியானோ கூறியுள்ளார்.
போ (Po) நதி மட்டுமல்லாது வடக்கு இத்தாலியில் உள்ள கார்டா ஏரியின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவில் குறைந்துள்ளது. இதனால் ஏரியில் உள்ள சிறிய தீவான சான் பியாஜியோவிற்கு ஏரி நிலப்பரப்பிலேயே நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் இப்போது தான் வசந்த காலத்தின் பிற்பகுதியில் பொதுவாகக் காணப்படும் மிதமான வெப்பநிலையை ஐரோப்பா எட்டியுள்ளது.