பணம் பத்தும் செய்யும், பாதாளம் வரை பாயும். இப்படி பணம் குறித்த அனுமானங்கள் ஏராளம். அதே போல் பணம் குறித்து எதிர்மறையான தத்துவங்களும் இங்கே வெகு பிரபலம். அதில் ஒன்று தான். பணம் கொடுத்தாலும் வாங்க முடியாத ஒன்று மகிழ்ச்சி. அப்படித் தான் தத்துவமேதைகளும், அறிஞர்களும் கூறிவந்தார்கள். ஏன் சாமானியார்கள் கூட இது தொடர்பாக விவாதித்ததுண்டு. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று பணம் இருந்தால் மகிழ்ச்சியை வாங்க முடியும் என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
அமெரிக்காவில் டேனியல் கேனமென் மற்றும் மேத்யூ கில்லிங்ஸ்வொர்த் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய கள ஆய்வு ஒன்று தான் காலம் காலமாக இருந்து வந்த ஒரு சித்தாந்தத்தை பொய்யாக்கி இருக்கிறது. இவர்கள் நடத்திய ஆய்வுப் படி அதிகமாக சம்பாதிக்கும் நபர்கள் மகிழ்சியாகவே இருக்கிறார்களாம். அமெரிக்காவில் 18 முதல் 65 வயது வரை உள்ள சுமார் 33,391 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோரின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 60 லட்சம் ரூபாய்.
இந்த ஆய்வு நடத்துவதற்காக Track Your Happiness என்ற செயலி ஒன்றை அறிமுகம் செய்து அதன் வழியாக கேள்விகளை கேட்டு முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இந்த ஆய்வின் படி அதிக பணம் சம்பாதிப்பவர்கள் அதிக சந்தோசமாக இருக்கிறார்களாம். ஆனால் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 20 விழுக்காடு பேருக்கு எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் மகிழ்ச்சி கிடைக்கவில்லையாம்.
ஒன்று, பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சி என்பது அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை பொறுத்து அமைகிறது என்பது. மற்றொன்று உணர்வு ரீதியான இடர்பாட்டில் இருப்பவர்களுக்கு பணம் எந்த வகையிலும் உதவாது என்பது. பணமும் உணர்வுரீதியான மன நிறைவும் வேறு வேறு துருவங்களாகவே இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வு மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
தனி மனித வருவாய் ஒருவரின் மகிழ்ச்சியின் அளவு கோல் என்றாலும், அவர்களின் உணர்வுரீதியான அனுகுமுறை பணத்தால் கிடைக்கும் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் பாதிக்கிறது என்பதும் இந்த கள ஆண்வு மூலம் தெளிபடுத்தப்பட்டிருக்கிறது. பணம் பந்தியிலே.. குணம் குப்பையிலே என்ற பாடல் வரிகள் நினைவு படுத்துவது இது தானோ?