கொரோனா வைரஸ்: கொரோனா வைரஸ், இந்த ஆண்டு புயல் போல உலகத்தை தாக்கியது. கடந்த 12 மாதங்களில், உலகளவில்
இந்த தொற்றால் சுமார் 80மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வுஹானில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2020ம்
ஆண்டு ஜனவரி 7ம் தேதி சீன அதிகாரிகள் இது ஒரு வகையான கொரோனா வைரஸ் என்று அடையாளம் கண்டு அறிவித்தனர். இந்த மர்ம வைரஸ் இவ்வளவு பெரிய அளவில் வெடிக்கும் என்பதற்கான எந்த அறிகுறிகள் அறிக்கைகள் கொடுக்கவில்லை. உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும், மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி இருப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜனவரி 11ம் தேதி, சீனா தனது முதல் மரணத்தை அறிவித்தது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி அன்று,
ஐரோப்பாவில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் மரணத்தை பிரான்ஸ் நாடு அறிவித்தது.
இதையடுத்து உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த மார்ச் 11ம் தேதி அன்று கொரோனா வைரஸை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. மார்ச் 26ம் தேதி, சீனா மற்றும் இத்தாலியை விஞ்சிய அளவுக்கு அதிகபட்ச தொற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இந்தியா தனது முதல் கொரோனா பாதிப்பை ஜனவரி 30ம் தேதி அறிவித்தது.வுஹானில் இருந்து திரும்பிய கேரள இளைஞர் கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியாக கண்டறியப்பட்டார். பின்னர் மார்ச் 12ம் தேதி முதல் மரணம் நிகழ்ந்தது. தற்போதுவரை நோய் பாதிப்பு இந்தியாவில் மட்டும் 1 கோடியை கடந்துள்ள நிலையில், தடுப்பூசிகளுக்கான ஒத்திகைகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இது தற்போது புதிய வகை கொரோனாவாக உருமாறி இங்கிலாந்தில் பரவ தொடங்கியுள்ளது. இது70% அதிக வீரியத்தை கொண்ட தொற்றாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வகை கொரோனா ஒருவரை தாக்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு:கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பொது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இது போன்ற ஊரடங்கை உலகம் இதுவரை பார்திருக்காது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அனைத்துமே ஊரடங்கை கடைப்பிடித்தனர். இந்நிலையில், தற்போது தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், ஒவ்வொரு மாதமும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையில் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் அதிகம்தான் என்று கூறலாம். ‘COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் புலம்பெயர்ந்தோர் (migrants ) முன்னணியில் இருந்ததை நாமறிவோம் . உடல்நலம், போக்குவரத்து மற்றும் உணவு சேவைகளில் அவர்கள் செய்த பணிகள் ஊரடங்கின் போது நமக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர்களுடன் நம்மை போன்ற பலரின் வாழ்க்கையும் இன்னலுக்குள்ளானது’ என்று ஐக்கிய நாடுகள் சபை (United Nations) தெரிவித்தது.
சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் பல புலம்பெயர்ந்தோர் COVID-19-ஆல் வேலை இழப்புகள், ஒரு இடத்திலிருந்து வெளியேற்றம், மற்றும் பிற பாகுபாடுகள் காரணமாக அவர்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமான வருமானமும் நிரந்தர தங்குமிடமும் இல்லாமல் தவித்தனர். தொற்றுநோய் மக்கள் வாழ்வில் ஒரு பெரிய சவாலாக மாறியது. மேலும் புலம்பெயர்ந்தோர் பயணக் கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்தியா - சீனா மோதல்: இந்தியா - சீனா இடையேயான லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா - சீனா இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இருநாடுகளின் அமைச்சர்கள் அளவிலும், ராணுவ கமாண்டர்கள் இடையிலும் பலச்சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எனினும் சீனா தனது வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றது.
அரசியல் முடிவுக்கு முழுக்கு போட்ட ரஜினி: கடந்த 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ரஜினி, 2017 மே 13ஆம் தேதி தனது ரசிகர்கள் மத்தியில் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, மொத்தத்தையும் சரிசெய்தால்தான் தமிழகம் உருப்படும் என்று ஆவேசகமாகக் கூறினார். அதேஆண்டு இறுதியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறினார்.கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, திருவள்ளுவரை போன்று தன் மீதும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாக சாடினார். நவம்பர் மாத இறுதியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். டிசம்பர் மூன்றாம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தமிழக மக்களுக்காக தனது உயிரே போனாலும் மகிழ்ச்சிதான் என்று கூறினார்.எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பதே தனது நோக்கம் என்றும் ஆன்மிக அரசியலை முன்னெடுப்பேன் என்றும் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சியின் அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என்றும், கூறி வந்த ரஜினி காந்த், அதற்கு முன்பாகவே அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்ததன் மூலம், 25 ஆண்டுகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வலியுறுத்தியும் டெல்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 5 வாரங்களாக போராடி வருகின்றனர். டெல்லி ஜந்தர்மந்தரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி வேணுகோபால் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, கொரோனா தொற்று மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் போராடி வரும் விவசாயிகளின் குரலுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பதாக கே.சி வேணுகோபால் சாடினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமிர்த்யா சென் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையை நீக்க போவதில்லை என்றும் விவசாயிகளின் நிலத்தை யாரும் பறிக்க முடியாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய அரசு மற்றும் வேளாண் சங்கங்கள் இடையே 6வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது தோல்வியில் முடிந்தது. அதேநேரம், விவசாயிகள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தனது வாழ்நாளின் கடைசி போராட்டமாக ஜனவரி மாத இறுதியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாக அண்ணா ஹசாரே எச்சரித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் என்னென்ன?: வேளாண்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு சமீபத்தில் மூன்று முக்கியச் சட்டங்களைக் கொண்டுவந்தது. விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்றும் அந்தச் சட்டங்கள். இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு சாதகமாக, நேர்மையற்ற இடைத்தரகர்களை ஒழிக்கும் சிதைந்த சந்தைகளை மேம்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு: ஆப்பிரிக்காவில் இருந்து ஆரம்பித்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியது. இந்தியாவில் கடந்த ஜுன்- ஜுலை மாதங்களில் படையெடுத்த வெட்டுகிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, உத்திரபிரதேசம் போன்ற 9 மாநிலங்களில் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தியது. இதனால் ராஜஸ்தானில் அதிகப்பட்சமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகியதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இல்லாவிட்டாலும் நீலகிரி மற்றும் தர்மபுரியில் வித்தியாசமான வெட்டுகிளிகள் இருந்ததையும் பார்க்க முடிந்தது.