பயணம் என்பது யாருக்கு தான் பிடிக்காது. பலரும் உலகில் உள்ள அனைத்து இடங்களையும் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். பாலைவனம் முதல் பனிப்படந்த மலைகள் வரை இயற்கையின் பேரதிசயங்களை உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் மறைந்து வைத்துள்ளன. அவை அனைத்தையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என நினைப்போம். டூர் பிளான் என்று வந்துவிட்டாலே முதலில் நம்முடைய மூளையில் தோன்றும் முதல் கேள்வி எவ்வளவு செலவாகும் என்பது தான்.
1. சிங்கப்பூர்: கடந்த பல ஆண்டுகளாகவே உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. பொது போக்குவரத்து வசதிகள் நிறைந்திருந்தாலும், வாடகை கார்கள் மற்றும் டாக்சிகளின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. உலகின் தூய்மையான நாடுகளில் ஒன்றாகவும், கலவையான உணவு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவிற்கு பிற நாட்டு மக்களை கவர்ந்திழுப்பதில் வெற்றி பெற்ற நாடாகவும் சிங்கப்பூர் உள்ளது.
2. பாரிஸ், பிரான்ஸ்: பாரிஸ் காதலர்களின் தேசம் என புகழப்படும் அளவிற்கு காதல் ஜோடிகள் விரும்பிச் செல்லும் இடமாக உள்ளது. பிரான்ஸ் தலைநகரமான இந்த காஸ்ட்லி நகரம், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக விளங்குகிறது. அதே சமயம் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான சுற்றுலா தளங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அழகான சிறிய கஃபேக்கள், காபி, சாக்லேட்டுகள், பேஸ்ட்ரிகள் மற்றும் ஒயின் ஆகியவை பாரிஸில் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் பாரிஸில் நீங்கள் அதிக காசு கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
3. ஹாங்காங்: ஹாங்காங் பணக்காரர்களுக்கான விடுமுறை கொண்டாட்ட தளமாகும். ஏனென்றால் ஹாங்காங்கில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை கூட உலகிலேயே அதிகமானதாக இருப்பது தான். இங்கு நீங்கள் சின்ன துண்டு நிலத்தை வாங்க ஆசைப்பட்டாலும், மில்லியனராக இருக்க வேண்டும். அப்படியானால் சுற்றி பார்க்க, கேளிக்கையுடன் விடுமுறையை கழிக்க எவ்வளவு செலவாகும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.
4. சூரிச், சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச், ஐரோப்பாவில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாகும். ஒட்டுமொத்த சுவிட்சர்லாந்தும் காஸ்ட்லியானது தான் என்றாலும், சூரிச் நகரை சுற்றிப் பார்க்க மட்டும் பெருந்தொகையை செலவழிக்க வேண்டி இருக்கும். நகரத்தில் போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு என ஒட்டுமொத்த செலவுமே அதிகமாக இருக்கும்.
5. நியூயார்க், அமெரிக்கா: உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் என்று வரும்போது நியூயார்க் நகரத்தை விட்டுவிட முடியாது. நகரத்திற்குள் உணவு, தங்குமிடம் மற்றும் பயணம் ஆகியவற்றின் செலவு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து மக்களின் பட்ஜெட்டிற்குள் இருந்தாலும், டாக்சிகளின் கட்டணம் மிக, மிக அதிகமாக உள்ளது.