செஸ் ஒலிம்பியாட் : , 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28ம் தேதி தொடங்கி 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளை சேர்ந்த 2,000த்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பதிவு செய்திருந்தன. இதன் மூலம் அதிக அணிகள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் என்ற வரலாற்று சாதனையை இந்த போட்டி பெற்றது
FIFA உலகக்கோப்பை : 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நவம்பர் 20-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடைப்பெற்றது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் டிசம்பர் 18 முடிவடைந்தது. அர்ஜெண்டினா – பிரான்ஸ் அணிகள் மோதிய இந்த இறுதி ஆட்டம் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு நொடியும் உற்சாகத்தை கொடுத்தது. சுமார்மூன்று மணிநேரம் நீடித்த பரபரப்பான ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட்அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை தட்டிச்சென்றது.
ரஷ்யா உக்ரைன் போர் : 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ஆதரவுடன் நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது.அப்போது தொடங்கிய போர் பல மாதங்களாக நடந்து வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான உக்ரைனிய மக்கள் மற்றும் 428 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 10,769 பெரியவர்களும் 790 குழந்தைகள் போரால் காயம் அடைந்திருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ( நிலநடுக்கம் 1000 பேர் பலி) : ஜூன் 21ம் தேதி 2022 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்தது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆப்கான் மதிப்பில் ஒரு லட்சம் நிதியுதவியும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 நிதியுதவியும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.மேலும் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் எனவும் தாலிபான் அரசு கோரிக்கை வைத்திருந்தது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67, சாலையில் நின்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, சுட்டுக்கொல்லப்பட்டார். ஜூலை 8 2022 அன்று, ஜப்பானின் மேலவைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்காக, நாரா நகரில் பிரசாரம் செய்தார்.அப்போது, 41 வயதுடைய ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அபே சுயநினைவுடன் இருந்தார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
துபாயில் கட்டப்பட்ட இந்து கோயில் : துபாயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோயில் அக்டோபர் 4, 2022 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 148 கோடி ரூபாய் செலவில் ஜபேல் அலி பகுதியில் இந்தக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் தினசரி ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், இதில் மொத்தம் 16 கடவுள்கள் உள்ளனர். சிவன், கிருஷ்ணா, கணபதி, மகாலட்சுமி உள்ளிட்ட 16 கடவுள்களுக்கு தனி தனியாக தலங்கள் உள்ளே அமைந்து உள்ளன. குரு கிரந்த சாஹிப் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. 105 காப்பர் மணிகள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் பிங்க் வண்ணத்தில் மாபெரும் தாமரை இங்கே அமைக்கப்பட்டு உள்ளது.
காசி-தமிழ் சங்கமம் : இந்தியாவின் பழமையான நகரம் என்று சொல்லப்படும் வாரணாசியில் வடக்கு மற்றும் தெற்கு மக்களை இணைப்பதற்கான புதிய முயற்சியாக “காசி-தமிழ் சங்கமம்” நவம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 1 மாதம் நடந்த இந்த நிகழ்வு 16 டிசம்பர் நிறைவடைந்தது. இந்த நிகழ்வின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காலத்தால் அழியாத இரு கலாச்சாரங்களின் சங்கமம் உருவாக்கப்பட்டுள்ளது.
கார்டிலியா குருயிஸ் சொகுசு கப்பல் : சென்னையில் இருந்து புதுச்சேரி சென்று திரும்பும் வகையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் ஜூன் 5, தேதி 2022 ஆம் ஆண்டு, தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்டிலியா குரூஸ் என்ற அந்தக் கப்பல் 700 அடி நீளத்தில் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. தண்ணீரில் தனி உலகமாக திகழும் அந்தக் கப்பலில் மொத்தம் 796 அறைகள் உள்ளன. 1950 பயணிகள் முதல் 2500 பயணிகள் வரை ஒரே நேரத்தில் அந்த சொகுசு கப்பலில் பயணிக்க முடியும்.
ரோஜர் பெடரர் : டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர், அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக செப்டம்பர் . 15ம் நாள் அறிவித்தார். 41 வயதான அவர், தனது உடல் ஒத்துழைக்க மறுக்கும் காரணத்தால், டென்னிஸ் வாழ்வுக்கு முழுக்குப்போடுவாத தனது ஓய்வு குறித்து அவர் வெளியிட்ட நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.பந்து எடுத்துப் போடும் ஜூனியராக டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கிய ஃபெடரர், தனது குழந்தைப் பருவக் கனவான சிறந்த முறையில் விளையாட வேண்டும் என்ற கனவை நினைவாக்கிக் கொண்டார். அவர் எட்டு முறை விம்பிள்டனை வென்றார். 2018 இல் - ஆறு ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களையும், ஐந்து யுஎஸ் ஓபன் பட்டங்களையும் (அனைத்தும் தொடர்ச்சியாக என்பது ஒரு சாதனை) மற்றும் ஒரு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார்.ஃபெடரர்-நடால் டென்னிஸ் சேலஞ்ச் என்பது ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் ஆகியோருக்கு இடையேயான நவீனகால டென்னிஸ் போட்டிகளாகும், இது டென்னிஸ் வரலாற்றில் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுகிறது. ஃபெடரரும் நடாலும் நேரடியாக 40 முறை விளையாடியுள்ளனர், நடால் 24-16 என ஒட்டுமொத்தமாக முன்னணியில் இருந்தார், இதில் 14-10 ஆகிய இறுதிப் போட்டிகளும் அடங்கும்.
குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து : அக்டோபர் 31ம் தேதி 2022ம் ஆண்டு குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மோர்பி நகரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மச்சு நதியின் குறுக்கே 1879ம் ஆண்டு 230 மீட்டர் நீளத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலாத்தலமாக கருதப்படும் இந்த பாலம் புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட நிலையில், பணிகள் முடிந்து அக்டோபர் 26ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.அக்டோபர் 31ம் தேதி விடுமுறை தினம் என்பதால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மோர்பி நகருக்கு வந்தனர். பாலத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் மட்டுமே நிற்க முடியும் என கூறப்படும் நிலையில், 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் பாரம் தாங்க முடியாமல் கேபிள் அறுந்து விழுந்தது. இதனால் ஏராளமானோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். நீச்சல் தெரிந்த சிலர், தண்ணீரில் நீந்தியபடி கரை சேர்ந்தனர். குழந்தைகள், பெரியவர்கள் என பலர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நிலையில், மீட்பு படை வீரர்கள் படகுகளில் சென்று மீட்டனர். எனினும் 140க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
டெல்லி 4 மாடி கட்டிட வணிக வளாகத்தில் தீ விபத்து : மே 13, 2022 ஆம் நாள் தலைநகர் டெல்லியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நான்கு மாடி வணிக வளாகம் பெரும் தீ விபத்திற்குள்ளானது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்தனர். இந்த நான்கு மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் சிசிடிவி மற்றும் ரவ்டர்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. அங்குதான் மே 13 அன்று மாலை 5 மணி அளவில் முதலில் தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் இருந்து கட்டடம் முழுவதும் பரவிய தீயை அனைக்க இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் போராடினர். தீ விபத்து ஏற்பட்ட கடையின் உரிமையாளர்கள் ஹரீஷ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மன்னரானார் சார்லஸ் : பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 ஆம் தேதி அவரின் மூத்த மகனான சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். 70 ஆண்டு காலம் பிரிட்டனை ஆண்ட எலிசபெத் அந்நாட்டு வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். கவலைக்கிடமாக இருந்த ராணி சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் உயிரிழந்தார். ராணியின் மறைவை தொடர்ந்து அவரின் மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். ராணி இறந்த 24 மணிநேரத்திற்குள் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது மனைவி கமீலா சார்லஸ் ராணியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை போராட்டம் : இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதிபர் மற்றும் பிரதமர் பதவிவிலக வலியுறுத்தி ஜூலை 9 ஆம் நாள் முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இலங்கை அரசின் புதிய விவசாயக் கொள்கையால், அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதோடு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், அதிபர் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினர் ஜூலை 9 ஆம் நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிய நிலையில், போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்ச-வின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
கண்ணீருடன் விடை பெற்ற செரீனா வில்லியம்ஸ் : 41 வயதான செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக 9ம் தேதி ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன்படி நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் தொடரில் பங்கேற்ற அவர், மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அஜ்லா டோம்லிஜனோவிக்-கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 5-7, 7-6, 1-6 என்ற செட்கள் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார். அதுவே, செரீனா வில்லியம்ஸ்-சின் கடைசி போட்டியாக அமைந்தது. ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் அவர் டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியேறியபோது அனைவரும் எழுந்து நின்றனர். அவர் அனைவரிடமும் விடைபெற்று கையசைத்த போது, 'சிம்ப்லி தி பெஸ்ட்' என்ற பாப் பாடல் அரங்கை அதிர வைத்தது.தனது வாழ்க்கையில் வேறு ஒரு பரிணாமத்தை நோக்கி பயணிக்க தயாராக உள்ளதாக செரீனா தெரிவித்தார். தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார்.உலக டென்னிஸ் வராலற்றில் செரீனா வில்லியம்ஸ், தனி சிறப்புடையவர் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மிதாலி ராஜ் ஓய்வு : இந்திய கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜூன் 8 , 2022ம் ஆண்டு அறிவித்தார்.தமிழர் மரபை சேர்ந்த மிதாலி ராஜ் கடந்த 1999, ஜூன் 26 அன்று, தனது 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அறிமுகமாகி 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2000, 2005, 2009, 2013, 2017 மற்றும் 2022 என 6 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற சாதனையையும் மிதாலி ராஜ் படைத்துள்ளார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மிதாலி ராஜ் ஜூன் 8, 2022 ஆம் நாள் அறிவித்தார்.