

தினம் தினம் அணியும் லெதர் ஷூக்களை சரியாகப் பராமரித்தால்தான் நீண்ட நாள் உழைக்கும். அதேசமயம் பளபளக்கவும் செய்யும். அலுவலகத்திலும் தோற்றத்திற்கு கூடுதல் பாராட்டுகள் கிடைக்கும். அதற்கு எந்த மாதிரியான வழிகளை பின்பற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.


கறைகளை நீக்கவும் : ஷூவில் கறை சேர்ந்தால் அதை உடனே நீக்கிவிடுங்கள். துடைக்கும்போது மென்மையான காட்டன் துணியைப் பயன்படுத்தி நீர் இல்லாமல் துடைக்கவும்.


கிளென்சர் :லெதர் கிளென்சர் அல்லது ஒரு ஸ்பூன் வினிகர் 2 ஸ்பூன் தண்ணீர் கலந்து காட்டன் துணியில் நனைத்து சுற்றிலும் தேய்க்கவும். இதனால் ஷூ பாலிஷ் செய்தது போல் மின்னும்.


காற்றோட்டம் : ஷூவிற்கு பாலிஷ் போடும் முன் காற்றோட்டமாக வைத்துவிடுங்கள். குறைந்தது 15 நிமிடங்கள் வைக்கலாம். முடிந்தால் இரவு முழுவதும் காற்றோட்டமாக வைத்துவிட்டு காலை பாலிஷ் போடலாம்.


பாலிஷ் : பாலிஷ் போடும் முன் ஷூ லேஸுகளை எடுத்துவிடுங்கள். பின் சீராக முற்றிலும் பாலிஷ் போடவும். பின் 10 நிமிடங்களுக்குக் காய விட்டபின் லேஸை மாற்றிவிடவும். மாதம் ஒரு முறை பாலிஷ் போட்டால் லெதர் உடைவதைத் தவிர்க்கலாம். நிறம் மங்காமல் இருக்கும்.


ஷூ கண்டிஷ்னர் : கண்டிஷ்னர் லெதர் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். லெதர் வறட்சியால் நிறம் மங்குதல், லெதர் தன்மை உடைதல் போன்றவற்றை தவிர்க்கலாம். 5 முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்திய பின் கண்டிஷ்னர் அப்ளை செய்யலாம். கடுமையான பருவநிலை இல்லாதபட்சத்தில் 15 முதல் 25 நாளுக்கு ஒரு முறை கண்டிஷ்னர் அப்ளை செய்யலாம்.


ஷூ துடைக்கும் முறை : லெதர் ஷூக்களை துடைக்கும்போது காட்டன் துணியின் இரு முனைகளைப் பிடித்துக் கொண்டு ஸிக் ஸாக் முறையில் தேய்க்க வேண்டும். அப்போதுதான் தூசிகள் , அழுக்குகள் அகலும்.