கிருத்திகா உதயநிதி தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் நடிகர், தயாரிப்பாளர், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினின் மனைவி ஆவார். உதயநிதியும் கிருத்திகாவும் 2002 ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். உதயநிதி கிருத்திகா தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சமீபத்தில் உதயநிதி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது கண்கள் கலங்க உதயநிதியை கிருத்திகா கட்டியணைத்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்த 'வணக்கம் சென்னை' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கிருத்திகா உதயநிதி. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' படத்தை இயக்கியிருந்தார் கிருத்திகா. வணக்கம் சென்னையைப் போல 'காளி' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு திருநங்கைகளின் வலிகளை சித்தரிக்கும் விதமாக "சதையை மீறி" என்ற இசை வீடியோவை இயக்கினார் கிருத்திகா. 12 திருநங்கைகளின் நடிப்பில் உருவாகிய இந்த இசை வீடியோவிற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். கிருத்திகா உதயநிதி ஜீ5 ஓடிடி தளத்துக்காக பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன் போன்ற பலர் நடித்திருந்த இந்தத் சீரிஸானது விம்ர்ச்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பேப்பர் ராக்கெட் பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் தங்கள் காதல் கதைகளை உதயநிதியும் கிருத்திகாவும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். சமீபத்தில் கிருத்திகா உதயநிதி காதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகியது. அந்த பதிவில் "காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க" என குறிப்பிட்டிருந்தார் கிருத்திகா உதயநிதி.