2022 பொங்கலுக்கு சன் டிவி-யில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் ஒளிபரப்பானது. அதோடு மதிய நேரத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. கலைஞர் டிவி-யில் ஜெய்பீம், சர்ப்பட்டா பரம்பரை ஆகியப் படங்கள் ஒளிபரப்பாகின. விஜய் டிவி-யில் அனபெல் சேதுபதியும், நெற்றிக்கண் திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டது.
ஜீ தமிழ் சேனலில் குழந்தைகள் சம்பந்தமான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற ரியாலிட்டி ஷோ-வில், புலிகேசி மன்னர் போலவும், மங்குனி அமைச்சராகவும் இரு குழந்தைகள் செய்த நகைச்சுவைக் காட்சி கடந்த ஜனவரி மத்தியில் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து அந்த குழந்தைகள் பேசியிருந்தார்கள். அந்த நகைச்சுவை காட்சிக்கு பாஜக-வினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. பிரதமர் மோடியின் மாண்பை குறைப்பது போல அந்த நகச்சுவை காட்சி இருப்பதாகவும், இதனால் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்தார்.
சன் டிவி-யின் ரோஜா சீரியலில் அனு துப்பாக்கியால் ரோஜாவை சுட போவதை முன்பே கண்டுபிடித்த அர்ஜுன், துப்பாக்கியின் நிஜ தோட்டாவை மாற்றி வைத்தார். இதனால் ரோஜா உயிர் பிழைத்தார். ஆனால் அர்ஜுன் சொன்னபடி குண்டு பாய்ந்த மாதிரி அனு முன்பு நடித்தார். ரோஜா இறந்தது போல் அனுவை நம்ப வைக்க, ஏற்கெனவே இறந்த பெண்ணின் உடலை கொண்டு வந்து, அந்த பெண்ணின் முகத்தில் நடுரோட்டில் வைத்து முகமாற்று அறுவை சிகிச்சை செய்தார் வக்கீல் அர்ஜூன். இந்த காட்சி சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.