புத்தம் புது பொலிவுடன் புதிய நட்சத்திர பட்டாளங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளகனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பரப்பை தொடக்கியது. .2K கிட்ஸ்கள் கொண்டாட்டமும், குதூகலமுமாய் கண்டு ரசித்த சீரியல் ‘கனா காணும் காலங்கள்’. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பள்ளி பருவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தான் அதிக அளவில் ரசிகர்களாக இருந்தார்கள்.
கனா காணும் காலங்கள் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, கனா காணும் காலங்கள் பருவம் 2, கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என மொத்தம் 4 சீசன்கள் ஒளிபரப்பாகின. இதில் ராகவி, இர்பான், பிளாக் பாண்டி, பிருந்தா தாஸ், குயிலி, பாலா சரவணன், கவின், ரியோ ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயன், டிடி, கெளதமி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தினர். பள்ளி நினைவுகளையும், கல்லூரிக்கால கனவுகளையும் கண்முன் காட்டிய கனா காணும் காலங்கள் சீரியலின் 4 சீசன்களுமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தடம் பதித்து வருகின்றனர். தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ் வடிவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளது. தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடித்துள்ளார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை மீண்டும் திறக்க உற்சாகமாக இருக்கிறார். கதை மனதைக் கவரும் நட்புகள், டீனேஜ் காதல்கள் மற்றும் பழைய பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக சேரும் கூட்டத்திற்கும் இடையே உருவாகும் போட்டிகளைச் சுற்றி வருகிறது
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பைப் பெறும்போது சக்திவேல் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்கிறார். பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பள்ளியை மூடுவதில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த வெப் சீரீஸீன் கதை. சிரிப்பு, சந்தோஷம், அழுகை, கோபம் என மீண்டும் நம்மை பள்ளிக் கால நினைவுகளுக்கே அழைத்து செல்ல கனா காணும் காலங்கள் வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாக உள்ளது. அதனை கண்டு ரசிக்க ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.