

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை அடுத்து இந்தி திரைப்பட உலகில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.


இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி திரைப்படங்களில் தான் பணியாற்றக் கூடாது என ஒரு கூட்டம் உழைத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.


ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்லாது ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த இசைக்கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் இந்தி திரையுலகம் தன்னை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.


தமிழ் சினிமாவில் வாரிசு அரசியல் இருக்கிறதா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ், “தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க?” என்று கூறி பரபரப்பை பற்ற வைத்தார்.


ஒளிப்பதிவாளர் நட்ராஜின் இந்த ட்வீட்டை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் ஷாந்தனு, “வாரிசு அரசியல் இங்கேயும் உள்ளது. அதே குழு அரசியல் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள். மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.