மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று வெளியானது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஏற்கெனவே ரசிகர்களிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படக்குழுவினர் பெரிய அளவில் பாகம் 2க்கு விளம்பரம் செய்யவில்லை. கடைசி சில நாட்களில் நடிகர்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்து படத்தை ப்ரமோட் செய்தனர்.
இதற்கிடையே இந்த திரைப்படத்திற்கு நள்ளிரவு காட்சிகள் சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணி முதல் திரையிடப்பட்டது.
கோவையில் முதல் காட்சிகளை காண திரையரங்குகளில் குறைவான ரசிகர்களே வந்திருந்தனர். கோவையில் பொன்னியின் செல்வன் 2 இன்று 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மால்கள் மற்றும் திரையரங்குகளில் இந்த படம் திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்த்து வருகின்றனர். அதே வேளையில் கோவையில் உள்ள திரையரங்குகளில் காலை முதலே குறைந்த அளவிலேயே கூட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் படம் வெளியாகி 4 மணி நேரத்துக்குள் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது தொடர்பான லிங்கும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து பதிவிட்டுள்ள சினிமா ரசிகர்கள் சிலர், திரைப்படத்தை இணையத்தில் பார்க்காமல் தியேட்டர்களில் சென்று பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.