ரசிகர்களால் கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கு 90களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த குஷ்பு, சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருக்கமான உறவை பேணி வந்தார். இதனால் இவர், அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இருந்து விலகிய குஷ்பூ, அதே ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தேசிய காங்கிரஸில் இணைந்தார்.அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். நரேந்திர மோடியின் கொள்கைகளை விமர்சித்து வந்த குஷ்புவின் ட்விட்டர் பதிவுகள் அவ்வப்போது பேசுபொருளானது.
இதனிடையே, 2020 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு நீதி கோரி சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்து குஷ்பூ பேசியிருந்தார். அதற்கு அடுத்த சில தினங்களிலேயே அக்டோபர் மாதம் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்த குஷ்பூ, அதே நாளில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை பாஜக நிறுத்தியது. அவர் தேர்தலில் திமுக வேட்பாளர் எழிலனிடம் 32,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், என் தந்தை என் அம்மாவை அடிப்பார். ஆணோ, பெண்ணோ, ஒரு குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதால் அந்த தாக்கம் அக்குழந்தையை வாழ்க்கை முழுவதும் அச்சமூட்டும். மனைவியை அடிப்பது, பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்றவற்றையெல்லாம் ஆண்கள் சிலர் பிறப்புரிமையாக நினைத்திருக்கலாம்.
நான் என்னுடைய 8 வயதில் என் தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அவருக்கு எதிராக பேச எனக்கு 15 வயதில்தான் தைரியம் வந்தது. ஆனால் இதையெல்லாம் சொன்னால் என் அம்மா நம்புவாரா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் எது நடந்தாலும் கணவனவே கண்கண்ட தெய்வம் என்ற மனநிலையில்தான் என் அம்மா இருந்தார். ஆனால் நான் அவருக்கு எதிராக போராடினேன். எனக்கு 16 வயது கூட ஆகவில்லை எங்களை விட்டு அவர் சென்றுவிட்டார். அடுத்தவேளை உணவு எங்கிருந்து வருமென்று எங்களுக்கு தெரியவில்லை என்றார்.