2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு எந்த பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமாரின் என்ன சொல்ல போகிறாய் மற்றும் நகைச்சுவை நடிகர் சதிஷ் முதன்முறையாக நாயகனாக நடித்த நாய் சேகர் படங்கள் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. முன்னதாக சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த படத்துக்கும் நாய் சேகர் என தலைப்பை அறிவிக்க பிரச்னை எழுந்தது. இறுதியாக நாய் சேகர் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விட்டுக்கொடுக்காததால் வடிவேலுவுக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்ற பல நடிகர்கள் நடித்த விக்ரம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. நடிகர் சூர்யா ரோலெக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில நடித்திருந்தார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், தமிழ் சினிமாவின் இதுவரையிலான வசூல் சாதனைகளை இந்தப் படம் தகர்த்தெறிந்தது. உலக அளவில் சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த படங்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த படங்கள் பெண்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக தொண்டுநிறுவனம் ஒன்றின் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக விளக்கமளித்த ரன்வீர், ''நான் என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 படங்களைப் பதிவேற்றினேன். அதில் ஒரு படத்தை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளனர் ''என்று விளக்கமளித்தார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்த நிலையில் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினர். இதனையடுத்து இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தகவல் வெளியாகிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாடகைத் தாய் சட்டத்தை மீறி குழந்தை பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் உரிய நடைமுறைகளை பின்பற்றியிருக்கிறார்கள் என்றும் விசாரணைக் குழு அறிக்கை வெளியிட்டது.
விவாகரத்து, உடல் நிலை பாதிப்பு என 2022-ம் ஆண்டு நடிகை சமந்தாவுக்கு மோசமான ஆண்டாக அமைந்தது. நாக சைதன்யாவுடனான விவாகரத்து சர்ச்சைகளிலிருந்து அவர் மீண்டுவருவதற்குள், கடந்த அக்டோபரில் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட சமந்தா, நான் சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டேன். நான் நினைத்ததை விட குணமாக அதிக நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. இந்த நோய் பாதிப்புடன் போராடிவருகிறேன் என்று குறிப்பிடடிருந்தார்.
கோமாளி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்த லவ் டுடே கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு அறிமுக நடிகரின் படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா?! என ஒட்டுமொத்த திரையுலகினரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது லவ் டுடே படத்துக்கு கிடைத்த வரவேற்பு.
வாரிசு படமும் துணிவு படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிற நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர் எனவும் அஜித் அதற்கு அடுத்த இடத்தில் தான் இருக்கிறார் என கொளுத்திப் போட சமூக வலைதளங்களில் இருவரது ரசிகர்களிடையே கருத்து மோதல் வெடித்தது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக அமைந்தது. நிகழ்வில் பேசிய நடிகர் விஜய், 1990களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாக இருந்தார். பின்னாளில் என்னுடன் அவர் சீரியஸான போட்டியாளராக மாறினார். அந்த நடிகரின் வெற்றியால் நானும் தொடர்ந்து ஓடினேன். அந்த நடிகரை விட அதிக வெற்றிகளைப் பெற வேண்டும் என்று போராடினேன். நமக்கு அப்படிப்பட்ட போட்டியாளர் வேண்டும். அந்த போட்டியாளர் ஜோசப் விஜய். உங்களுடன் போட்டிபோடுங்கள் என்று பேசினார். பின்னர் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.