'அதிகாலை புறாவின் காலில் கயிறு கட்டப்பட்டு அதை போர்டின் மேல் உட்கார வைத்து, கிரேனில் கேமெரா காத்திருக்க, அது புது இடத்தில் பாஷை புரியாததால் கேமெரா பக்கமே திரும்ப மாட்டேன் என்று அடம் பிடித்தது. தானியம் லஞ்சம் கொடுத்தும் பயனில்லை. தொண்டைக்குள் க்கும் பக்கும் என்று சொல்லியும் ம்ஹூம். அது ஒரு மணிக்குப் பின் தான் கேமெரா பக்கமே திரும்பியது.
அதற்கு காரணம் இருக்கிறது. சுஜாதாவின் பல கதைகளை படமாக்குகிறேன் என்று கொத்துக்கறியாக்கியிருக்கிறார்கள். இனிமே என்கிட்ட கதையே கேட்டு வராதீங்க என்று கடிந்துமிருக்கிறார். அப்படியொரு தவறு செய்துவிடக் கூடாது என்று அவர் எழுதிய டீட்டெயிலில் ஒன்றைக்கூட விடாமல் அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார் கமல். புறாவை வைத்து வெற்றிகரமாக காட்சியை முடித்த பின் சுஜாதாவிடம், திருப்திதானே என்று கேட்க, சுஜாதா, 'குமுதத்தில் கருங்குருவி என்று எழுதியதாக ஞாபகம்' என்கிறார். என்ன நக்கல் பாருங்கள்.
கதையைப் பாதிக்காத விஷயங்களில் அடம்பிடித்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று உழைப்பை வீணடிப்பது விமர்சனத்துக்குரியது. ஒரு பெயர் பலகையை காண்பிக்கையில் அதன் மீது புறா இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. படத்தின் கதையோ, அதன் பிடிப்போ இந்தக் காட்சியால் மாறிவிடப் போவதில்லைதானே. பிறகு ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும் என்ற கேள்வி சுஜாதாவின் நையாண்டியில் தொக்கி நிற்பதைப் பார்க்கலாம்.
விக்ரம் படத்தின் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் என அனைத்தும் இன்றும் பார்த்து ரசிக்கிற விதத்தில் உள்ளன என்பது ஆச்சரியமான ஒன்று. ராக்கெட் கடத்தல், உளவாளி, எலி கோவில், வித்தியாசமான கலாச்சாரத்தை கொண்ட சாம்ராஜ்யம், அதன் கோமாளி ராஜா, சாப்பிடுகிற உணவில் எச்சில் உமிழும் போலி சாமியார், ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள், பாலைவனம், துப்பாக்கிச் சண்டை என ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்குரிய அனைத்தும் விக்ரமில் இருந்தது.
படம் தமிழில் வெளியான அதேநாள் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் வெளியானது. நல்ல ஓபனிங்கை பெற்றாலும் படம் நீடித்த ஓட்டத்தை பெறவில்லை. குடும்பம், சென்டிமெண்ட் இல்லாத படங்கள் இப்போதும்கூட திரையரங்குகளில் இரண்டு வாரத்துக்கு மேல் தாக்குப் பிடிப்பது கடினம். விக்ரம் அதிக நாள்கள் ஓடாததற்கும் இதுவே காரணமாக அமைந்தது. ஜுன் 3 வெளியாகும் புதிய விக்ரம் இந்த சென்டிமெண்டுகளைத் தாண்டி வசூலிக்கும் என நம்புவோம்
விக்ரம் விஷயத்தில் படத்திற்கு சம்பந்தமில்லாத இன்னொரு ஹாலிவுட் தொடர்பும் உள்ளது. கமலின் விக்ரம் 1986 ஜுன் 29 வெளியாவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு 1986 மே 16 ஆம் தேதி டாம் க்ரூஸ் நடித்த டாப் கன் படம் வெளியானது. 36 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை அதே டாம் க்ரூஸை வைத்து எடுத்து சில தினங்கள் முன்பு மே 27 ஆம் தேதி வெளியிட்டனர். 36 வருடங்களுக்குப் பிறகு அதே விக்ரம் பெயரில் கமல் நடித்த படமும் ஜுன் 3 ஆம் தேதி வெளியாகிறது. டாம் க்ரூஸின் படம் பழைய படத்தின் சீக்வெல். கமலின் புதிய விக்ரம் பழைய விக்ரமின் சீக்வெல் அல்ல. இது ஒன்றுதான் வித்தியாசம்.