எழுத்தாளர் ஜெயமோகனின் கதைகள் அதிகளவில் திரைப்படமாகின்றன. பாலாவின் நான் கடவுள், வசந்தபாலனின் அங்காடித்தெரு, மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் 2.,0 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு, வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன், வெற்றிமாறனின் விடுதலை என நிறையப் படங்கள் ஜெயமோகனின் எழுத்துப் பங்களிப்பில் உருவானவை.
சினிமா என்பது மேக் பிலீவ். பார்வையாளர்களை நம்ப வைப்பது. அப்படி அண்டர்வேர்ல்ட் குறித்து நம்மை நம்ப வைக்கிற திரைப்படங்களை பத்து வருடங்களுக்கு முன்பே ராம் கோபால் வர்மா தந்திருக்கிறார். சத்யா, கம்பெனி, சர்க்கார், சர்க்கார்ராஜ் போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணம். அவர் தயாரித்த D நிழல் உலகு குறித்த இன்னொரு சிறந்த திரைப்படம். அனுராக் காஷ்யபின் பல படங்கள் நிழல் உலகை நெருக்கமாக காட்சிப்படுத்தியவை. முக்கியமாக குலால் திரைப்படம் மும்பை தவிர்த்த வடஇந்திய நிழல் உலகை பேசியது. விஷால் பரத்வாஜின் மெக்பூல் தவிர்க்க முடியாத மற்றொரு திரைப்படம்.
சமீப காலங்களில் குஜராத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு மட்டும் பல லட்சம் கோடியைத் தாண்டும். அரசின் கஸ்டடியில் இருந்து காணாமல் போன போதைப் பொருளின் மதிப்பு ஐந்து லட்சம் கோடி என தனியார் தொலைக்காட்சி பிரேக்கிங் நியூஸ் வெளியிட்டு அரசுக்கு சவால்விட்டது. அரசுத் தரப்பிலிருந்து இதுவரை அதற்கு பதில் இல்லை. எளிய நடைமுறை யதார்த்தத்தை மறைத்து விக்ரமை ஜெயமோகன் விமர்சித்துள்ளார் என்கிறார்கள் விமர்சகர்கள்.
புனைவுக்கும், சினிமா எழுத்துக்குமான இடைவெளியை ஜெயமோகன் இதுவரை இட்டு நிரப்பியதில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு.. கடல் படத்தில் கொலைகள் செய்கிறவனாக நாயகன் சித்தரிக்கப்பட்டிருப்பான். 16 வயது நாயகி கிராமத்துப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்கப் போகையில் இவனும் உடன் செல்வான். பிரசவத்திற்கு நாயகன் உதவுவான். பிரசவத்தின் இரத்தக்கறை அவன் கைகளில் படியும். அதுவரை அடுத்தவரை கொலை செய்பவனாக, இறப்பின் ரத்தக்கறை கரங்களில் படிய இருந்தவன், பிறப்பின் இரத்தக்கறை கைகளில் பட்டதும் திருந்துவதாக அந்தக் காட்சியை வைத்ததாக ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார்.
தத்துவார்த்தரீதியில் இதனை புனைவாகவோ, அபுனைவாகவோ எழுதியிருந்தால் இந்தக் கருத்தின் உச்சத்தை ஜெயமோகன் தொட்டிருப்பார். ஆனால், சினிமா சாமானியர்களின் கலை. சாமானியர்கள் ஜெயமோகனின் தத்துவார்த்தமான காட்சியை அணுகியது தங்களின் நடைமுறை அறிவைக் கொண்டு. அத்தனை பெண்கள் கூடி இருக்கையில், முன்பின் தெரியாத ஒரு வயசுப் பையனை பிரசவம் பார்க்க எந்த கிராமத்தில் ஒத்துக் கொள்வார்கள் என்ற பார்வையாளனின் கேள்விக்கு முன்னால் ஜெயமோகனின் தத்துவார்த்தம் அடிபட்டுப் போனது.