1934 ஏப்ரல் 24-ஆம் தேதி கடலூரில் பிறந்த ஜெயகாந்தன், தனது 81 வது வயதில் 2015 ஏப்ரல் 8-ஆம் தேதி இதே நாளில் மரணமடைந்தார். இன்று அவரது ஏழாவது ஆண்டு நினைவு தினம். ஜெயகாந்தன் படைப்பிலக்கியவாதி, பாடலாசிரியர், பத்திரிகையாளர், வசனகர்த்தா திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டவர். தனது ஞான குருவாக வரித்துக் கொண்ட பாரதியைப் போன்று ரௌத்திரம் பழகியவர். இலக்கியவாதி என்றால் சிங்கத்தைப் போன்றவன் என்ற எண்ணத்தை உருவாக்கியவர், அதன்படி வாழ்ந்தவர்.
ஜெயகாந்தன் திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், நண்பர்களையும் குறித்து 'ஒரு இலக்கியவாதியின் கலையுலக பயணம்' என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். ஜெயகாந்தனை இலக்கியவாதியாக மட்டுமே அறிந்திருப்பவர்களே அதிகம். அவர் இயக்கிய படங்களும், படமாக்கப்பட்ட அவரது கதைகளும் தமிழ் சினிமாவுக்கு செழுமையான பகுதியை அளித்திருக்கின்றன.
கடலூர் மஞ்சக்குப்பத்திலிருந்து தனது 12 வயதில் சென்னை வந்த ஜெயகாந்தனை அரவணைத்துக் கொண்டது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் கம்யூன் வாழ்க்கை. கூலியாக பல வேலைகள் பார்த்துவிட்டு, ப்ரூப் ரீடராக மாறினார். அவருக்கு இலக்கிய பரிட்சயத்தை ஏற்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் அவரை சினிமாவுக்கும் கொண்டு வந்தது. கம்யூனிஸத்தில் ஆர்வம் கொண்டவர்கள் இணைந்து உருவாக்கிய பாதை தெரியுது பார் படத்தில் இரண்டு பாடல்களை ஜெயகாந்தன் எழுதினார். 'சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டைத் துணையை தேடுது...' என்ற புகழ்பெற்ற பாடல் ஜெயகாந்தன் எழுத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்றதுதான்.
ஜெயகாந்தன் எழுதி, தயாரித்து, இயக்கி வெளியிட்ட முதல் படம், உன்னைப் போல் ஒருவன். பால்யத்தில் தனக்கேற்பட்ட நட்பை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய நாவலை அதே பெயரில் படமாக்கினார். குறைந்த செலவில், குறுகிய நாள்களில் படத்தை எடுத்து முடித்தார். திரைப்படங்களில் ஆர்வம் இல்லாத காமராஜர் இந்தப் படத்தைப் பார்த்து ஜெயகாந்தனை பாராட்டினார். தேசிய விருதுக்கு அனுப்பப்பட்ட படம் மூன்றாவது பரிசை வென்றது. முதல் பரிசு சத்யஜித் ரேயின் சாருலதாவுக்கு கிடைத்தது. ரேயின் படத்துடன் தனது படம் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தது ஜெயகாந்தனுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
அடுத்து தான் எழுதிய, யாருக்காக அழுதான் கதையை திரைப்படமாக்கினார். படத்தை அவரே இயக்கினார். நாகேஷ் திருட்டுமுழி ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வழங்கினார். கே.ஆர்.விஜயா, பாலையா, சகஸ்கரநாமம் ஆகியோரும் நடித்திருந்தனர். நாகேஷின் நடிப்பு மீது ஜெயகாந்தனுக்கு பெரும் மரியாதை இருந்தது. நாகேஷ் நடிப்பின் மேதை என்று பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயகாந்தன் எழுதிய கைவிலங்கு என்ற குறுநாவல் கல்கியில் வெளியானது. பிறகு காவல் தெய்வம் என்ற பெயரில் ராணிமுத்துவில் பிரசுரமானது. அந்தக் கதையை காவல் தெய்வம் என்ற பெயரில் தயாரிப்பாளர் எஸ்.வி.சுப்பையா தயாரித்தார். ஜெயகாந்தனின் சினிமா பிரவேசத்தின் போது உடனிருந்த நலம்விரும்பிகளில் ஒருவரான கே.விஜயன் காவல் தெய்வதை இயக்கினார். சிவாஜி, சிவகுமார், லட்சுமி, நாகேஷ், நம்பியார், அசோகன், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். சிவாஜி சாமுண்டி என்ற கள் இறக்கும் தொழிலாளியாக கௌரவ வேடத்தில் நடித்தார்.
ஜெயகாந்தன் எழுதிய அக்னிபிரவேசம் சிறுகதை தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்க, அக்கதையின் தொடர்ச்சியை நாவலாக எழுதினார். அது, சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற பெயரில் திரைப்படமானது. ப, பா வரிசை படங்களை எடுத்து வந்த பீம்சிங் இதனை இயக்க, லட்சுமி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் பிரதான வேடங்களில் நடித்தனர். இந்தப் படம் லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இந்த நாவல் ஜெயகாந்தனுக்கு சாகித்ய அகதாமி விருதை பெற்றுத் தந்தது
சில நேரங்களில் சில மனிதர்கள் வெளியானதற்கு அடுத்த வருடம் 1978 இல் ஜெயகாந்தனின் இன்னொரு நாவலான ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் வெளியானது. சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்த லட்சுமியே இதிலும் பிரதான வேடம் ஏற்றார், ஸ்ரீகாந்த், ஒய்.ஜி.பார்த்தசாரதி என அப்படத்தில் நடித்த பலரும் இதிலும் நடித்தனர். பீம்சிங்கே படத்தை இயக்கினார். படம் முடியும் தருவாயில் பீம்சிங் மரணமடைந்தார். இந்தப் படம் வெளியாகி லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருது கிடைத்தது.
பீம்சிங்கின் மகனும் பிரபல எடிட்டருமான பி.லெனின் ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர் நாவலை திரைப்படமாக்கினார். ஜெயகாந்தனின் புதுச்செருப்பு கடிக்கும் கதை நாகேஷ் நடிப்பில் திரைப்படமானது. அதனை ஜெயகாந்தன் அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கு விற்றார் என கூறப்படுகிறது. அதன் பிரதி இப்போது இல்லை. அதேபோல் அவரது இன்னொரு கதையான எத்தனை கோணம் எத்தனை பார்வை படத்தை பி.லெனின் படமாக்கினார் அதுவும் வெளியாகவில்லை. எம்ஜிஆரை விமர்சித்து அவர் எழுதிய, சினிமாவுக்கு போன சித்தாளு கதையை வ.கௌதமன் குறும்படமாக்கினார்.
ஜெயகாந்தனின் பல கதைகள் தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியிருக்கின்றன. பாரிசுக்குப்போ நாவல், நல்லதோர் வீணை என்ற பெயரில் தொலைக்காட்சி நாடகமாக ஒளிபரப்பட்டது. இதில் லட்சுமி, நிழல்கள் ரவி பிரதான வேடங்களில் நடித்திருந்தனர். மௌனம் ஒரு பாஷை சிறுகதையும் தொலைக்காட்சி நாடகமானது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், வெண்ணிறாடை நிர்மலா நடித்திருந்தனர். இதன் கதை வித்தியாசமானது.
பேரக்குழந்தைகள் எடுத்த முதிய பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்கிறாள். அவமானத்தால் தற்கொலை செய்து கொள்ள முயலும் அவள் காப்பாற்றப்படுகிறாள். வீட்டாருக்கு அவள் ஏன் தற்கொலைக்கு முயன்றாள் என்பது குழப்பமாக உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பெண்ணை மணந்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட மருத்துவரான அப்பெண்ணின் மகன் தாயை காண வருகிறான். தாய் கர்ப்பமாக இருப்பதை கண்டு கொள்கிறான். மகிழ்ச்சியடையும் அவன் தாயை நல்லமுறையில் பராமரிக்க அவளை தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அப்பெண் வேரில் பழுத்த பலாப்பழத்தை உண்பதுடன் கதை முடியும்.
முதியவயதில் தாய் கர்ப்பமானால் என்னாகும் என்ற கதையில் இப்போது தான் இந்தியில் பதாய் ஹோ என்ற படமும், மலையாளத்தில் ப்ரோ டாடி படமும் வந்துள்ளது. தமிழில் பதாய் ஹோ படத்தை வீட்ல விசேஷம் என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள். ஜெயகாந்தன் 1962 லேயே பேரக்குழந்தைகள் எடுத்த பெண் கர்ப்பமானால் என்னாகும் என்ற கதையை எழுதியிருக்கிறார். அவர் காலத்துக்கு முன் சிந்தத்த இலக்கியவாதி என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை.