அய்யப்பனும் கோஷிக்கும் கிடைத்த வரவேற்பு இதிலிருந்து மாறுபட்டது. தமிழ் ரசிகர்கள் விரும்பும் ஹீரோயிசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தாங்கள் விரும்பும் ஹீரோயிசப் பின்னணியில் மலையாள யதார்த்தம் கலந்த திரைப்படம் என்பதால் தமிழ் திரையுலகில் உள்ளவர்கள் குறிப்பாக உதவி இயக்குநர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு அமோக வரவேற்பு இருந்தது. ஜோஜி போன்ற படங்களுடன் ஒப்பிடுகையில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படமே பொதுப்பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.
அய்யப்பனும் கோஷியும் படத்தின் கதை என்ன? பணக்காரனும், முன்னாள் ராணுவ வீரனுமான கோஷி குரியன் காரில் மதுப்பாட்டில்களுடன் அட்டப்பாடி மலைப்பகுதியில் வைத்து போலீசாரால் மறிக்கப்படுகிறான். அட்டப்பாடி மலைப்பகுதியில் மது குடிக்க, எடுத்துச் செல்ல தடை உள்ளது. அதிகாரம் மற்றும் பணத்திமிர் கொண்ட கோஷி குரியன் போலீசாருக்கு அடங்க மறுக்க, சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் நாயர் அவனை கன்னத்தில் அறைந்து இழுத்துச் சென்று எப்ஐஆர் போடுகிறார்.
அய்யப்பனை அடித்து அடங்க வைத்துவிட்டே இடத்தை காலி செய்வேன் என கோஷி திமிர் காட்ட, ஆதிவாசியான அய்யப்பன் ஒருகாலத்தில் தங்களை எதிர்த்தவர்களை நிர்மூலமாக்கியவர் என்ற பின்னணி கதையுடன் கோஷியை எதிர்கொள்ள, களம் சூடாகும். இறுதியில் அய்யப்பனால் கோஷி அடக்கப்படுவான். அதற்கு முன்பே தான் யார், தனது செயல்கள் என்ன என்பதை கோஷி புரிந்து கொள்வான்.
பணக்கார திமிர் பிடித்த கோஷிக்கும், ஆதிவாசியான அய்யப்பனுக்கும் இடையில் நடக்கும் ஈகோ யுத்தம் மட்டுமில்லை இப்படம். இவ்விரு கதாபாத்திரங்களுக்குப் பின்னால் கேரளாவின் நீண்ட சரித்திரம் உள்ளது. முக்கியமாக இந்த கதாபாத்திரங்கள் மலையாள சினிமாக்களில் ஓங்கி முன்வைக்கப்பட்டவை. அதிலும் கோஷி கதாபாத்திரம் முக்கியமானது.
இந்தப் பின்னணியில் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. உதாரணமாக, 2002 இல் மோகன்லால் நடிப்பில் சதுரங்கம் என்ற படம் வெளியானது. இதில் அவர் கத்தோலிக்க கிறிஸ்தவர். பெயர் ஜிம்மி ஜேக்கப். சொந்தமாக பார் உண்டு. மந்திரி சாய் குமாருடன் மிக நெருக்கம். எஸ்பியுடன் ஒறண்டை இழுக்கிறவர். என்னைத்தவிர வேறு யார் என்ற திமிருடன் வளையவரும் ஜிம்மி ஜேக்கப் அரசியல் சதுரங்கத்தில் ஒரு காயாக வெட்டப்பட்ட பின்பு, அதிகார மோகத்தில் தான் செய்த தவறுகளை உணர்ந்து திருந்துவார்.
நஸ்ரானி திரைப்படத்தில் மம்முட்டி இதே போன்ற வேடத்தில் நடித்திருப்பார். ஆனால், நியாயஸ்தன். படத்தில் வரும் பிஜு மேனன் கதாபாத்திரம் சதுரங்கம் மோகன்லாலின் குணங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும். ஜெயராம் அச்சாயன்ஸ் என்ற பெயரிலேயே ஒரு படம் நடித்தார். இந்தப் படங்களில் உள்ள பொதுவான ஒற்றுமை குடி. நாயகன் கூட்டம் சேர்த்து நாள் முழுக்க குடித்துக் கொண்டேயிருப்பார். நாயகனை குடியிலிருந்து மீட்க, கோவிலில் நடத்தப்படும் குடியை மறக்கச் செய்யும் தியானத்துக்கு அனுப்பும் நடைமுறை பல படங்களில் வந்திருக்கிறது.
ஜெயராமின் அச்சாயன்ஸ், மம்முட்டியின் தோப்பில் ஜோப்பன் உள்பட பல படங்களில் இந்த தியான காட்சிகள் உண்டு. இந்தப் படங்களில் நாயகன் போலீசாருடன் மோதும் காட்சிகள் பெரும்பாலும் இடம்பெறும். சதுரங்கத்தில் எஸ்பி நக்மாவுடன் மோகன்லால் சவால்விட்டு மோதுவார். தோப்பில் ஜோப்பனில் மம்முட்டி இன்ஸ்பெக்டரை பொது இடத்தில் அடித்து துவைப்பார். நஸ்ரானியில் போலீஸ் அதிகாரி லாலு அலெக்ஸ்தான் மம்முட்டியின் திடீர் எதிரியாக மாறுவார். இதேபோல் உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அளவுக்கு மீறிய பணம், சொகுசான வீடு, கார்கள், ரசனையான உணவுகள், கட்டற்ற குடி, அரசியல் செல்வாக்கு இவையனைத்தையும் கொண்ட அச்சாயன் கதாபாத்திரங்கள் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கம். ரப்பரும், ஏலக்காயும், குருமிளகும் பயிரிட்டு, பணம் அள்ளும் இந்த அச்சாயன்களின் மீது இவை இல்லாத தரப்பினருக்கு விமர்சனங்கள் உண்டு. இவர்களின் மேலாதிக்கத்தை ஒருவன் கேள்வி கேட்கையில் அவர்களுக்கு நிம்மதி பிறப்பதுண்டு. அய்யப்பனும் கோஷியிலும் வரும் கோஷி, இந்த அச்சாயன்களின் பிரதிநிதி. அய்யப்பன் ஒடுக்கப்பட்ட ஆதிவாசிகளின் பிரதிநிதி. அவர்களின் மலைப்பறம்புகளில் அல்லவா இந்த அச்சாயன்களின் ரப்பரும், குருமிளகும், ஏலக்காயும் விளைகின்றன.
இவ்விரு கதாபாத்திரங்களின் வரலாற்றுப் பின்னணி வேறு மொழிகளில் இல்லை. இது கேரளாவுக்கே உரித்தானது. இந்த கதாபாத்திரங்களை வெட்டியும் ஒட்டியும் தனித்தனியே ஏராளமான சினிமாக்கள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன. சச்சி அவர்களை ஒரே படத்தில் மோதவிட்டிருந்தார். மலையாள மூலத்தில் இது வெறும் ஈகோ மோதல் மட்டுமில்லை. வர்க்க மோதல் மட்டுமில்லை. அதையும் தாண்டி பல வரலாற்றுப் பின்னணிகளை கொண்டது. கேரளாவுக்கு வெளியே இந்த கதாபாத்திரங்களை வைக்கையில் அது வெறும் ஈகோ மோதல் மட்டுமே. தமிழ், தெலுங்கு, இந்தி என வேறு நிலங்களில் கோஷிக்கும், அய்யப்பனுக்கும் வேர்களில்லை. அதன் காரணமாகவே பீம்ல நாயக் வெறும் சண்டைப் படமாக எஞ்சியது. இந்தியில் அது அவ்வாறே இருக்கும். தமிழில் அந்தத் தவறை செய்ய மாட்டார்கள் என நம்புவோம்.