ரஜினியின் நிறைய படங்களில் விசு பங்களிப்பு செய்திருக்கிறார். பாலசந்தரின் தில்லு முல்லு ரஜினியின் காமெடி நடிப்பை அடையாளம் காட்டிய முக்கியமான படம். இந்தி கோல் மால் படத்தை தமிழுக்கேற்ப மாற்றி தில்லு முல்லாக்கியவர் விசு. தில்லு முல்லு வெளியான அதே வருடம் (1981) பாலசந்தரின் கவிதாலயா ரஜினியை வைத்து நெற்றிக்கண் திரைப்படத்தை தயாரித்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தின் கதையை விசு எழுதியிருந்தார்.
இதில் ரஜினி அப்பா, மகன் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அப்பா மோசமானவர், மகன் நல்லவன். சிவனுக்கு அவரது மகன் முருகன் புத்திமதி சொன்ன பின்னணியில், அப்பா ரஜினிக்கு இதில் ஒரு வசனம் எழுதப்பட்டிருந்தது. "நீ உபதேசம் பண்ணுனா கை கட்டி நிற்கிறதுக்கு நான் அந்த ஈஸ்வரன் இல்லடா, நான் கோடீஸ்வரன்..." என்ற அந்த டயலாக் படம் வெளியானபோது பரவலாக சிலாகிக்கப்பட்டது. ரஜினியின் கபாலி டயலாக்கின் முன்னோடி இது எனலாம்.
பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் ரஜினியை வைத்து தயாரித்த புதுக்கவிதை வெற்றிப் படமாக அமைந்தது. தெலுங்குப் படத்தின் தழுவலான இதன் திரைக்கதை விசு எழுதினார். எஸ்.பி.முத்துராமன் படத்தை இயக்கியிருந்தார். எஸ்.பி.முத்துராமன் ஏவிஎம்முக்கு படம் இயக்கும் போது விசுவையும் உடனழைத்துக் கொண்டார். ஏவிஎம் ரஜினியை வைத்து தயாரித்த நல்லவனுக்கு நல்லவன் தர்மாத்துடு தெலுங்குப் படத்தின் தழுவல். இதனை தமிழுக்கேற்ப மாற்றி எழுதியவர் விசு. இந்த நேரத்தில் விசு தனியாக பல படங்கள் இயக்கியிருந்தார். ஏவிஎம் சரவணன் விசு இயக்கத்தில் படம் தயாரிக்க விருப்பப்பட்டு விசுவிடம் கதை கேட்டார். விசு சொன்ன கதை அவருக்குப் பிடித்திருந்தும், நல்ல குடும்பக்கதை இருந்தால் சிறப்பு என நினைத்தார் சரவணன். அதற்கேற்ப ஒரு கதையை விசு சொல்ல, சரவணனுக்கு கதை பிடித்துப் போனது. அந்தக் கதை விசுவின் வெற்றிகரமான நாடகமான குடும்பம் ஒரு கதம்பம்.
அந்த நாடகத்தை ஒய்.ஜி.மகேந்திரன் திரைப்படமாக்குகிறேன் என்று குதறி வைத்திருந்தார். படம் மகாதோல்வி. இந்த விஷயத்தை விசு சரவணனிடம் சொல்ல, அவர் அசரவில்லை. கதையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. நகைச்சுவைக்கு வீட்டு வேலைக்காரி வேடத்தை முக்கியத்துவம் கொடுத்து எழுதச் சொன்னார். அதுபோலவே விசுவும் எழுதினார். அந்தப் படம்தான் சம்சாரம் அது மின்சாரம். வெள்ளி விழா கண்ட படம், சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படத்துக்கான தேசிய விருதையும் முதல்முறையாக தமிழுக்குப் பெற்றுத் தந்தது.
நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு கதாசிரியர், வசனகர்த்தாவாக நுழைந்து, இயக்குநர், நடிகர் என விசு முத்திரைப் பதித்தார். பாலசந்தரைப் போலவே விசுவும் இடஒதுக்கீட்டு கொள்கையை ஏற்காதவர். இடஒதுக்கீட்டை எதிர்த்து தனது படங்களில் காட்சிகள் வைத்துள்ளார். அவரது பலம் குடும்ப உறவுகளை, அதில் ஏற்படும் சிக்கல்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் எடுக்கக் கூடியவர். விசுவின் அந்த இடம் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது.