விசு எழுதிய முதல் நாடகம் உறவுக்கு கை கொடுப்போம். வெற்றிகரமாக ஓடிய நாடகம் இது. ஒரு கூட்டுக்குடும்பத்தில் ஊதாரித்தனமாக செலவளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை நாடகம் நகைச்சுவை கலந்து சொன்னது. நாடகத்தின் வெற்றியைப் பார்த்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நாடகத்தின் கதை உரிமையை வாங்கி அதே பெயரில் தனது சித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்தார். சினிமாவுக்காக கதை, காட்சி, வசனங்களில் திருத்தங்களும் செய்தார்.
இந்தப் படத்துக்கு முன்புதான் ஏவிஎம்முக்காக விசு நல்லவனுக்கு நல்லவன் படத்தின் திரைக்கதையை எழுதித் தந்தார். ரஜினி, ராதிகா நடித்த அந்தப் படம் தெலுங்கில் வெளியான தர்மாத்துடு படத்தின் தமிழ் ரீமேக். தழுக்காக படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து புதிதாக எழுதித் தந்தார் விசு. அந்த நேரம் அவர் ஏவிஎம் சரவணனிடம் பல கதைகள் கூறினார். எதுவும் அவர் எதிர்பார்த்தபடி இல்லை. குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதையை அவர் கேட்க, விசு சொன்ன கதைதான் சம்சாரம் அது மின்சாரம்.
சரவணனுக்கு கதைப் பிடித்துப் போனது. ஏன் இதை முன்பே சொல்லவில்லை என்று கேட்க, தனது கதை உறவுக்கு கை கொடுப்போம் என்ற பெயரில் சினிமாவாகி தோல்வியடைந்ததை கூறினார் விசு. அனாலும், அந்தக் கதையில் சரவணனுக்கு நம்பிக்கை இருந்தது. அவரது ஆலோசனையின்படி வேலைக்கார கண்ணம்மா கதாபாத்திரத்தை சம்சாரம் அது மின்சாரத்துக்காக விசு உருவாக்கினார். மனோரமா நடித்த அந்த கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
35 தினங்களில் பதினைந்து லட்சம் முதலீட்டில் சம்சாரம் அது மின்சாரம் எடுக்கப்பட்டு 1986 ஜுலையில் திரைக்கு வந்தது. படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்பை பெற்று 25 வாரங்களை கடந்து வெள்ளிவிழா கண்டது. அந்தக் காலத்திலேயே சுமார் ஒன்றே முக்கால் கோடிகளை படம் வசூலித்தது. சிறந்த பொழுதுப்போக்கு திரைப்படத்துக்கான தேசிய விருது உள்பட பல விருதுகளை இப்படம் பெற்றது. இந்த விருதைப் பெற்ற முதல் தமிழ்ப் படமும் இதுதான். தோல்வி கண்ட ஒரு கதையை சிறிது மாற்றி எடுத்து வெற்றி பெற முடியும் என்பதற்கு சம்சாரம் அது மின்சாரம் சிறந்த உதாரணம்.