பூவே உனக்காக
இளைய தளபதி விஜய்க்கு குடும்ப ரசிகர்களைப் பெற்றுத்தந்த படம் பூவே உனக்காக. விக்ரமன் இயக்கிய இந்தப் படம் காதல், காமெடி, குடும்ப சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் தேர்ந்த நடிகராக விஜய் மிளிர்ந்தார். காதல் ஒரு செடி மாதிரி போன்ற இப்படத்தின் வசனங்கள் பிரபலம். வாரிசு படத்தின் டிரெய்லரில் கூட இப்பட வசனத்தை விஜய்யே கலாய்த்திருப்பார். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
காதலுக்கு மரியாதை
பூவே உனக்காக படத்துக்கு பிறகு நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது காதலுக்கு மரியாதை. காதலர்கள் தங்களது குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தியது. குறிப்பாக இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கையை பக்கவாட்டில் நீட்டி தலையை மட்டும் ஆட்டும் ஸ்டைல் பின்னாளில் விஜய்யின் மானரிசமாகவே மாறிப்போனது. கூடுதலாக இளையராஜாவின் பாடல்கள் இந்தப் படத்துக்கு ஹைலைட்டாக அமைந்தது. இப்படம் ஈரோஸ் நவ் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
குஷி
எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் விஜய் - ஜோதிகா இணைந்து நடித்த படம். தொடர் தோல்விகளில் இருந்த தனக்கு கேரியரை மீட்டெடுக்க குஷி படம் பெரிதும் உதவியது என 'இசை' பட விழாவில் விஜய் பேசியிருந்தார். கதையை படத்தின் துவக்கத்திலேயே சொல்லி,காதலர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னை என்ற புதுமையான கதை சொல்லல் மூலம் கவனம் ஈர்த்தார் எஸ்.ஜே.சூர்யா. தேவாவின் துள்ளலான பாடல்கள், ஜீவாவின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு என இன்றளவும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
கில்லி
அதுவரை காதலை மையப்படுத்திய படங்களில் மட்டுமே நடித்த விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றிய படம் திருமலை. அதிலிருந்து அவரை மாஸ் ஹீரோவாக மாற்றிய பெருமை தரணியின் கில்லியையே சேரும். அப்பாவிடம் திட்டு வாங்கும் மகன், தங்கையுடன் செய்யும் குட்டி கலாட்டா என முதல் பாதியில் பெரும்பாலான தமிழ்நாட்டு இளைஞர்களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் விஜய். மதுரை முத்துப்பாண்டியாக திரையில் மிரட்டினார் பிரகாஷ்ராஜ். ஒரு ஹீரோவாக விஜய்யை எவ்வளவு ரசித்தோமோ, செல்லம் என டிரேட் மார்க் டயலாக்குடன் திரையில் தோன்றும் பிரகாஷ் ராஜையும் கொண்டாடினோம். ஒரு படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் வலுவாக எழுதப்பட்டால் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்பதற்கு கில்லி மிகப்பெரிய உதாரணம். கில்லி படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
திருப்பாச்சி
நடிகர் விஜய்யை ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு சேர்த்த படம் என திருப்பாச்சியை சொல்லலாம். கில்லியில் நடிகர் விஜய் பெற்ற மாஸ் ஹீரோ இமேஜை தக்க வைக்க உதவியது. தங்கச்சி சென்டிமென்ட், மிரட்டலான சண்டைக்காட்சிகள் என பொழுதுபோக்கு படமாக அமைந்தது. இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சச்சின்
முழுக்க மாஸ் ஹீரோவாக மாறிய விஜய் மீண்டும் காதல் கதையுடன் களமிறங்கினார். ஜான் மகேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் - வடிவேலு காம்போவின் காமெடியை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்களும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காண கிடைக்கிறது.
போக்கிரி தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்றால் அவர் போலீஸாக நடிக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. அந்த வகையில் விஜய் கொஞ்சம் லேட்டாக போலீஸ் உடை அணிந்த படம் போக்கிரி. படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை பரபர திரைக்கதையால் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படம் எம்.எஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
தெறி
போக்கிரி படத்துக்கு பிறகு விஜய் மீண்டும் போலீஸ் உடை உடுத்திய படம். இயக்குநர் அட்லி செய்த முதல் ஃபேன் பாய் சம்பவம். குறிப்பாக பரபர ஆக்சன், சமந்தாவுடன் காதல் காட்சிகள் என பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தார் விஜய். குறிப்பாக விஜய்க்கும் மீனாவின் மகள் நைனிகாவிற்கும் இடையேயான கியூட்டான காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் இருக்கிறது.
மெர்சல்
தெறி படத்துக்கு பிறகு மீண்டும் அட்லியுடன் இணைந்த படம். இதில் தான் இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதியாக மாறினார். அப்பா, இரண்டு மகன்கள் என 3 வேடத்தில் நடிகர் விஜய் உண்மையில் மெர்சல் காட்டிய படம். வெற்றிமாறன் கதாப்பாத்திரத்துக்காக முறுக்கு மீசை தாடி என தோற்றத்தை முழுமையாக மாற்றிக்கொண்டு நடித்தார். ஆளப்போறான் தமிழன் உள்ளிட்ட இந்தப் படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தது. மருத்துவமனைகளில் நிகழும் மோசடிகள் குறித்து இந்தப் படம் பேசியது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் இருக்கிறது.
பிகில்
3வது முறையாக அட்லியுடன் விஜய் இணைந்ததால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ராயப்பன், பிகில் என்கிற மைக்கேல் என இரண்டு வேடங்களில் கலக்கினார். இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் வெவ்வேறு டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என வித்தியாசம் காட்டி ஆச்சரியப்பட வைத்தார் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியிருநத்தது. இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இருக்கிறது.
மாஸ்டர்
முதன்முறையாக லோகேஷுடன் இணைந்த படம். நீண்ட இடைவேளைக்கு பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படமாக மாஸ்டர் அமைந்தது. லாக் டவுனுக்கு பிறகு மக்கள் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என உலகமே பயந்துகொண்டிருந்தபோது வெளியாகி வசூல் சாதனை படைத்தது. விஜய் சேதுபதி பவானி என்ற வேடத்தில் மிரட்டினார். அனிருத்தின் பாடல்கள் கூடுதல் ஹைலைட்டாக அமைந்தது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.