சிவாஜி குடும்பத்தின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனம் சிவாஜி ஃபிலிம்ஸ். சிவாஜி கணேசன் உச்சத்தில் இருந்த போதே, இந்த நிறுவனம் சார்பில் படங்கள் தயாரிக்கப்பட்டன. 1960 இல் சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்தப் படத்தை தனது மகனகள் பிரபு, ராம்குமார் பெயரில், பிரபுராம் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரித்தார்.
கதை, திரைக்கதை, வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவில் கோலோச்சியிருந்த சி.வி.ஸ்ரீதர் 1959 இல் கல்யாணப் பரிசு படத்தை இயக்கினார். முக்கோண காதல் கதையில் அமைந்த இந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி, கே.ஏ.தங்கவேலு நடித்தனர். படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்செட்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அதற்கு அடுத்த வருடம் கல்யாணப் பரிசை தெலுங்கில் இயக்கினார் ஸ்ரீதர்.
சிறந்த திரைக்கதையாசிரியர் என பெயர் பெற்ற ஸ்ரீதர் முதல் படத்திலேயே சிறந்த இயக்குனராகவும் முத்திரைப் பதித்தார். அவரது இரண்டாவது படத்திற்கு ரசிகர்களிடையே இருந்த எதிர்பார்ப்பு குறித்து சொல்லத் தேவையில்லை. 1960 இல் ஸ்ரீதரின் இரண்டாவது படம் மீண்ட சொர்க்கம் வெளியானது. ஜெமினி கணேசன், பத்மினி நடித்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நிச்சயம் ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் சிவாஜியிடம் அவர் சொன்ன விடிவெள்ளி படத்தின் கதை பிடித்துப்போக, சிவாஜியே அதனை பிரபுராம் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரித்தார்.
விடிவெள்ளி என்ற பெயருக்கும் எம்ஜிஆருக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஏன், தமிழக அரசியலுக்குமே தொடர்பு உண்டு. 1953 இல் கருணாநிதியின் கதை, வசனத்தில் விடிவெள்ளி என்ற படத்தில் எம்ஜிஆர் நடிப்பதாக முடிவாகி வேலைகள் தொடங்கப்பட்டன. அந்த நேரத்தில் டால்மியாபுரம் ரயில்நிலையத்தை கல்லக்குடி என்று தமிழில் மாற்ற வேண்டம் என கருணாநிதி தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்து கைதானார். இரு திமுக தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் மரணமடைந்தனர். கருணாநிதி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிகழ்வு காரணமாக விடிவெள்ளி படம் கைவிடப்பட்டது. 1960 இல் சிவாஜி - ஸ்ரீதர் படத்துக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது.
அவர் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளியின் மகள் சரோஜாதேவியை காதலிப்பார். இந்த நேரம், அவரது தங்கை நெக்லஸிலின் டாலரில் இருந்து ஒரு ஆணின் புகைப்படத்தை கண்டெடுப்பார்கள். இதனால், எம்.என்.ராஜத்தின் மீது சந்தேகம் விழும். அவரை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். உண்மையில்அந்த நெக்லஸ் சரோஜாதேவிக்கு சொந்தமானது. அதில் இருந்தது அவரது அண்ணனின் படம். அப்படியொரு மகன் தனக்கு இருப்பதை முதலாளி சொல்லியிருக்க மாட்டார். ஏன், எதற்கு என்ற கேள்விகளும், எப்படி இது முடிவுக்கு வந்தது என்ற பதிலும் விடிவெள்ளியை சுவாரஸியப்படுத்தின.
எனினும், படத்தின் இறுதியில் சரோஜாதேவியின் தந்தை எஸ்.வி.ரங்காராவ் மகளுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய நினைப்பது, மண்டபத்தில் திடீரென தீ பிடிப்பது, அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சரோஜாதேவியை சிவாஜி காப்பாற்றுவது என கொஞ்சம் நீட்டித்து கிளைமாக்ஸை முடித்தது சின்னக்குறை. ஆனாலும் படம் பட்டிதொட்டியெங்கும் கலெக்ஷனில் பட்டையை கிளப்பி 100 நாள்கள் ஓடியது.