அந்தளவுக்கு தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டு ரேஷன் கார்டில் மட்டும் தான் வடிவேலு பெயர் இல்லை. மற்றபடி, போகிற போக்கில் அன்றாடம் நமக்கே தெரியாமல் பல வடிவேலுவின் வசனங்களை நாம் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு பெரிய இன்னல்கள் வந்தாலும், அவரின் பாணியில், “விட்றா விட்றா சூனா பானா” என எளிதாக கடந்துப் போக அவரது வசனங்கள் நமக்கு பேருதவி புரிகின்றன. சிலரின் நடிப்பு நம்மை ஆட்கொள்ளும், சிலரின் டயலாக் டெலிவரி நம்மை சிரிக்க வைக்கும். ஆனால் வடிவேலுவை பொறுத்தவரை அவர் நடிக்கவும் வேண்டாம், வசனமும் பேச வேண்டாம், ஸ்கிரீனில் வந்து நின்னாலே ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு மக்களை தன்வசப்படுத்தியிருக்கிறார். இன்றைய சூழலில், குடும்பம், அலுவலகம், தனிப்பட்ட பிரச்னைகள் என ஒரு நாளைக் கடப்பதே ஒரு யுகத்தைக் கடப்பது போல நாம் ஓடிக் கொண்டிருக்கையில், இரவு தூங்குவதற்கு முன்னால் 10 நிமிடமாவது தலைவனின் காமெடியை பார்த்து மனதை லேசாக்கிக் கொள்பவர்கள் தான் பெரும்பாலும். சிறியவர் முதல் பெரியவர் வரை வடிவேலுவை தெரியாதவர்களும், பிடிக்காதவர்களும் இருக்கவே முடியாது என்பது தான் யதார்த்தம். சீரியஸான பிரச்னைகள் வரை பொழுதுபோக்கு விஷயங்கள் வரை அனைத்திலும் மீம் டெம்ப்ளேட்டாக இடம்பெற்று நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். இப்படி வடிவேலுவைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இது ஒருபுறமிருக்க, அவர் மற்ற நடிகர்களுடன் இணைந்து திரையில் நிகழ்த்திய மாயாஜாலத்தில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
சில படங்களில் ரஜினிகாந்த் - வடிவேலு இணைந்து நடித்திருந்தாலும், அவர்கள் கூட்டணியில் வெளியான முத்து, சந்திரமுகி படங்கள் எப்போதும் ரசிகர்களின் ஃபேவரிட். குறிப்பாக சந்திரமுகி படத்தில் வரும் காமெடி சீக்வென்ஸுகள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். பேய் இருக்கா இல்லையா? என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை.
மற்ற முன்னணி நடிகர்களுடன் வடிவேலு இணையும் படங்களை விட, விஜய்யுடன் அவர் இணையும் படங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து வைக்க தவறுவதில்லை. காரணம், இயல்பாக நகைச்சுவை உணர்வு கொண்ட விஜய், வைகைப்புயலுடன் இணையும் போது உருவாகும் ஒவ்வொன்றுமே மேஜிக் தான். இதில் காமெடியன் யாரு என்னும் சந்தேகம் எழுமளவுக்கு சில காட்சிகள் இருக்கும். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 15 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். ’மதுர’, ‘பகவதி’, 'சச்சின்', 'ஃப்ரெண்ட்ஸ்', 'போக்கிரி', 'வசீகரா', 'காவலன்' உள்ளிட்ட படங்கள் இவர்களின் சிறந்த படங்களாக இருப்பதால், இந்த ஜோடி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சரத்குமார் - வடிவேலு கூட்டணியும் 1 டஜன் படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளது. அரசு படத்தில் கோயிலில் மணி அடிக்கும் வடிவேலும், இந்தி குடும்பத்திடம், ‘கோன் ஐஸ் கோயிலுக்கு வெளில விப்பாங்க, பேட்டா எங்கம்மா தர்றாங்க’ போன்ற வசனங்கள் இன்றும் பலரின் பேவரிட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. அதோடு ஏய் படத்தில், நமீதாவை காதலிக்க சரத்குமாருக்கு பலவித ஐடியாக்களை சொல்லுவார் வடிவேலு. ஆனால் எல்லாத்தையும் சொதப்பிக் கொண்டே வருவார் சரத். ஒரு கட்டத்தில் ’இனி நான் ஐடியா சொல்லணும்ன்னா என் பிரைனுக்கு பெட்ரோல் போடணும்” என்று வடிவேலு சொல்ல அதற்கு முறைப்பார் சரத்குமார். ‘முறைக்காத வேலு உன் லவ்வுக்கு ஃபுல்லா நான் என் மூளைய தானே செலவு பண்றேன். உன் மூளை ஃப்ரெஷ்ஷா அப்படியே தானே இருக்கு’ என சிக்ஸர் அடிப்பார் வடிவேலு.