அகத்தியன் இயக்கிய மதுமதி படம் வெளியாகி இன்றோடு 29 வருடங்கள் ஆகிறது. 1993 மே 6 ஆம் தேதி இதே நாளில் மதுமதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தின் வெற்றிதான் அஜித் நடித்த வான்மதி படத்துக்கு காரணமாக அமைந்தது. அகத்தியன் தமிழ் சினிமாவில் கதாசிரியராக முதலில் பணிபுரிந்தார். தப்புக்கணக்கு, மனசுக்கேத்த மகராசா படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிவிட்டு மாங்கல்யம் தந்துனானே படத்தை இயக்கினார். அப்போதும் அவருக்கு கதை எழுத வாய்ப்புகள் வந்தன.
கே.எஸ்.ரவிக்குமாரின் பொண்டாட்டி ராஜ்யம் படத்துக்கு கதை எழுதினார். மனசுக்கேத்த மகராசா படத்தில் இவரது பெயர் கருணாநிதி சாந்தாராம் என்று வரும். அவரது இயற்பெயர் கருணாநிதி. மாங்கல்யம் தந்துனானே படத்தை ரவிதாசன் என்ற பெயரில் இயக்கினார். பிறகுதான் அகத்தியன் என்ற பெயரை தனக்கு வைத்துக் கொண்டார். அகத்தியன் இயக்கிய இரண்டாவது படம் மதுமதி. ரவி ராகுல், மோனிகா நடித்த இந்தப் படத்தில் சித்ரா, ஆர்.சுந்தர்ராஜன், பாண்டு, விசித்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஏழை நாயகன், பணக்கார நாயகியை காதலிக்கும் எவர்க்ரீன் ஃபார்முலா படம். இதில் நாயகன், நாயகி இருவரும் மாணவர்கள். வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இவர்கள் கேம்ப் ஒன்றில் ஒன்றாக தங்குவார்கள். அங்கு, ஆற்றில் குளிக்கும் நாயகியை ஒருவன் கேமராவில் புகைப்படம் எடுக்க, அதனை தடுக்கும்விதமாக நாயகியை அணைப்பது போல் மறைத்துக் கொள்வான் நாயகன். நாயகி கோபமாகி நாயகனின் கன்னத்தில் அறைந்துவிடுவாள்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாயகியின் கூடாரத்துக்குள் அவள் இல்லாத போது நுழைந்ததற்காக நாயகனுக்கு மைதானத்தை முட்டிப்போட்டு சுற்றிவரும் தண்டனை அளிக்கப்படும். அவன் நாயகியின் கூடாரத்தில், உண்மையை விளக்கி கடிதம் வைத்துவிட்டுச் சென்றிருப்பான். கடிதத்தைப் படிக்கும் நாயகிக்கு அவன் மீது காதல் தோன்றும். விசித்ரா இதில் மாணவியாக வந்து ஆசிரியர் சுந்தர்ராஜனை தனது இளமைச் சேட்டைகளால் கதறவிடுவார்.
அவரது திரையரங்கில் மதுமதி நல்ல வசூலை பெற்றிருந்தது. சின்ன பட்ஜெட்டில் இதுபோல் ஒரு கதை இருந்தால் படமாக்கலாம் என்று அவர் சொல்ல, மதுமதி போன்றே கதை அமைத்து, படத்தின் பெயரையும் ஏறக்குறைய அதேபோல் வைத்து அகத்தியன் இயக்கிய படம்தான் அஜித் நடித்த வான்மதி.இந்தப் படத்தில் அஜித் மிடில் கிளாஸ் இளைஞர். பொறுப்பில்லாமல் சுற்றுகிறவர். நாயகி பணக்கார திமிர் பிடித்த வடிவுக்கரசியின் மகள் ஸ்வாதி. முதலில் மோதலில் ஆரம்பிக்கும் பழக்கம் இறுதியில் காதலில் முடியும். ஆனால், அஜித்தை வடிவுக்கரசிக்குப் பிடிக்காது. கவர்னரின் மகனுக்கு ஸ்வாதியை மணம் முடிக்க தீர்மானிப்பார்.
இறுதியில் காதல் வென்றதா இல்லையா என்பது கதை. மதுமதியில் நடித்த பாண்டு உள்பட சிலரை இந்தப் படத்திலும் அகத்தியன் பயன்படுத்தினார். படம் நல்ல வெற்றியை பெற்றது. தொடர்ந்து அந்த வருடமே அஜித், தேவயானி நடிப்பில் காதல்கோட்டை படத்தை எடுத்தார். அதிலும் பாண்டு உண்டு. அவரது சினிமா கரியரில் முக்கியமான படங்களில் காதல்கோட்டையும் ஒன்றாக அமைந்தது. ஏற்கனவே இயக்கிய படத்தைப் போலவே ஒரு படம் வேண்டும் என்று கேட்டபோது கொஞ்சம் கோபத்துடனே, டைட்டில் முதல் கதைவரை அப்படியே மதுமதியை தழுவி வான்மதியை அகத்தியன் எடுத்தார். ஆனால், அது மதுமதியைவிடவும் ஹிட்டானது. அதுவொரு பொற்காலம் என்று சொல்வதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.