சி.வி.ஸ்ரீதர் தயாரிப்பாளராகவும், திரைக்கதையாசிரியராகவும் இருந்த காலத்தில் அமரதீபம் என்ற படத்தை தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்தார். பிரகாஷ் ராவ் இயக்கிய அந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் எழுத, சிவாஜி நாயகனாக நடித்தார். 1942 இல் யுஎஸ்ஸில் வெளியான ரேண்டம் ஹார்வெஸ்ட் திரைப்படத்தின் கதையை தழுவி அமரதீபம் கதை எழுதப்பட்டது.
அமரதீபம் 1956 வெளியாகி வெற்றி பெற்றதுடன், இந்தியில் அமர்தீப் என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புராண வள்ளி கதையை திரைப்படமாக்க தீர்மானித்து, சிவாஜியை ஸ்ரீதர் அணுகினார். அதே வள்ளி கதையில் நடிக்க, வேறொரு தயாரிப்பாளரிடம் முன்பணம் வாங்கியிருப்பதை கூறி, ஸ்ரீதரின் படத்தில் நடிக்க சிவாஜி மறுத்தார். இதனால் வள்ளி கதையை படமாக்குவதை கைவிட்டு, தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் ஆங்கிலப் படத்தை தழுவி ஒரு கதையை எழுதுவது என முடிவானது.
உத்தம புத்திரனில் சிவாஜி முதல்முறை இரு வேடங்களில் நடித்தார். இரட்டையர்களான இவர்கள் சந்தர்ப்பவசத்தால் பிரிந்து விடுவார்கள். ஒருவர் நல்லவனாகவும், வல்லவனாகவும் வளர மற்றொருவன் கெட்டவனாகவும், பேராசைக் கொண்டவனாகவும் வளர்வான். இந்த இருவேறு குணங்களை தனது நடிப்பால் உயிர் கொடுத்தார் சிவாஜி. இந்தப் படத்தில்தான் முதல்முறை ஜும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
மைசூர் பிருந்தாவனத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, அதனை வேடிக்கைப் பார்த்த பிரெஞ்ச் சுற்றுலா பயணியிடம் இருந்த கேராவைப் பயன்படுத்தி ஜும் காட்சியை இந்தியாவிலேயே முதல்முறை படமாக்கினார் படத்தின் ஒளிப்பதிவாளரான ஏ.வின்சென்ட். இவரது முதல் தமிழ்ப் படம் அமரதீபம். அடுத்து உத்தம புத்தரனுக்கு ஒளிப்பதிவு செய்தார். ஸ்ரீதர் இயக்கிய முக்கியமான திரைப்படங்களுக்கு வின்சென்ட்தான் பிற்காலத்தில் ஒளிப்பதிவு செய்தார்.
சிவாஜி, பத்மினி, எம்.கே.ராதா, எம்.என்.நம்பியார். ராகினி, கண்ணாம்பா ஆகியோரின் சிறந்த நடிப்பும், ஸ்ரீதரின் சீரிய திரைக்கதை, வசனமும், பிரகாஷ் ராவின் இயக்கமும், வின்சென்டின் கலாபூர்வமான ஒளிப்பதிவும், ஜி.ராமனாதனின் மயக்கும் இசையும், பாடல்களும், பிரமாண்டமான அரங்குகளும் சேர்ந்து உத்தம புத்திரனை வெற்றிப் படமாக்கின.