மதுரையில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் சேங்கையரசி தம்பதியர்களுக்கு ஆறு மகன்களில் ஒருவராக பிறந்தார் நடிகர் சூரி. 7 ஆம் வகுப்பு வரை படித்த சூரி அதற்கு மேல் படிப்பு வரவில்லை என பள்ளிக்குச் செல்லவில்லை. வறுமையில் வாடும் தனது குடும்பத்தை காப்பதற்கு என்ன வேலை என்றாலும் சலிக்காமல் செய்துள்ளார்.
திரைத்துறையில் பேமஸ் ஆவதற்கு முன்னதாக புகழ் பெற்ற திருமதி செல்வம், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறு சிறு வேடத்தில் நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா? இதோடு மட்டுமின்றி வெள்ளத்திரையில் சங்கமம், ஜேம்ஸ்பாண்டு, வின்னர், தீபாவளி போன்ற திரைப்படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் சூரி. இதுப்போன்று பல திரைப்படங்களில் நடித்த சூரிக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
வெண்ணிலா கபடிக்குழு வெற்றியைத்தொடர்ந்து பல பட வாய்ப்புகள் சூரிக்கு குவியத் தொடங்கியது. குறிப்பாக சிவகார்த்திக்கேயனுடன் மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறமையை தட்டித் தூக்கி எறிந்திருப்பார். இந்த இருவரும் ஒவ்வொரு படத்தில் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இருக்காது.
இதோடு தேசிங்கு ராஜா, புஷ்பா புருஷனாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார் சூரி. இதுப்போன்று பல்வேறு தமிழ் திரைப்படங்களில் தனக்கென ஓர் இடத்தைப்பெற்றுள்ள சூரி குறுகிய காலத்தில் வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையான காமெடி நடிகராக வலம் வருகிறார் சூரி.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சூரி 2006-ம் ஆண்டு ஆர்யாவின் நடிப்பில் வெளியான கலாபக் காதலன் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி சென்றது குறித்து தெரிவித்துள்ளார். அதில், ஒவ்வொருவராக ஆடிஷனரில் கலந்து கொண்டு நடித்து காண்பிக்க அடுத்ததாக நான் உள்ளே சென்றேன். ஆனால் நான் நடித்துக் காண்பிக்கும் முன்பே கீழே மயங்கி விழுந்துவிட்டேன். அங்கு இருந்தவர்கள் எனக்கு தண்ணீரை மூஞ்சியில் தெளித்து விட்டு மயக்கத்தில் இருந்து எழுப்பி உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார்கள்.
அதன் பிறகு இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால் தான் எனக்கு மயக்கம் வந்துவிட்டது அதை விடுங்க சார் நான் நடித்துக் காட்டுகிறேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினேன். ஆனால் அங்கு இருந்தவர்கள் எனக்கு சாப்பாடு மட்டும் வாங்கி கொடுத்துவிட்டு வாய்ப்பை தரவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.