இன்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடும் த்ரிஷா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் தலா 4 படங்களில் நடித்துள்ளார். இந்த இருபெரும் நட்சத்திரங்களை வைத்துப் பார்த்தால், முதலில் த்ரிஷா நடித்தது விஜய்யுடன் கில்லி படத்தில் தான். சரி விஜய் அஜித்துடன் த்ரிஷா நடித்த 8 படங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
ஒக்கடு படத்தின் ரீமேக்கான கில்லி படத்தை இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். கபடி வீரராக விஜய், பிரகாஷ் ராஜிடமிருந்து தப்பித்து அவரிடம் தஞ்சமடையும் தனலட்சுமியாக த்ரிஷா இருவருமே நடிப்பில் அசத்தியிருப்பார்கள். 2004, ஏப்ரல் 17-ம் தேதி வெளியான இப்படம் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூலித்தது. இன்றும் பலரின் ஃபேவரிட் படமாக இருக்கிறது கில்லி!
2005 பொங்கலை முன்னிட்டு அந்தாண்டு ஜனவரி 14-ம் தேதி வெளியானது விஜய் - த்ரிஷாவின் திருப்பாச்சி. பேரரசு இயக்கிய இந்தப் படம் அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. சரத்குமாரின் ஐயா, தனுஷின் தேவதையைக் கண்டேன் ஆகியப் படங்களுடன் வெளியான திருப்பாச்சி, 112 திரையரங்குகளில் 100 நாட்களையும், தமிழ்நாட்டில் மொத்தமாக 200 நாட்களையும் நிறைவு செய்தது.