1999-ல் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான த்ரிஷாவை சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது அமீரின் ‘மெளனம் பேசியதே’ திரைப்படமும் ப்ரியதர்ஷனின் ‘லேசா லேசா’ திரைப்படமும் தான். ‘லேசா லேசா’ திரைப்படத்தில் த்ரிஷாவின் அழகில் மயங்கிய தமிழ் சினிமா ‘நீ இல்லாமல் வாழ்வது லேசா’ என புலம்பி தள்ளியது.
‘மனசெல்லாம்’, ‘எனக்கு 20 உனக்கு 18’, ‘சாமி’ என த்ரிஷா அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் அவரை திரை ரசிகர்களின் மனசெல்லாம் நிறைய வைத்தது. ‘சாமி’ திரைப்படத்தில் விக்ரமுடன் ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு’ பாடலில் ஆட்டம் போட்ட த்ரிஷாவை.,‘இதுதானா இதுதானோ..’ பாடலில் ஞாயிற்று கிழமையின் காதல் கொஞ்சல்களை சொன்ன த்ரிஷாவை அதுமுதல் காதல் கொள்ள ஆரம்பித்தது ரசிகர் பட்டாளம்.
விஜயுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் அஜீத்துடன் ஜீ, மங்காத்தா, என்னை அறிந்தால், என நடித்து அவர்களிருவரின் ரசிகர்களையும் தன் விசிறி ஆக்கினார் இந்த அழகு புயல். . குறிப்பாக கில்லி மெகா ஹிட் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது. தனலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் தாவணி போட்ட நிலவாய் இள மனசெல்லாம் கொள்ளை கொண்டார் த்ரிஷா..
அன்பு அண்ணனுக்கும் காதலனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கிராமத்துப் பெண்ணாக ‘உனக்கும் எனக்கும்’, தந்தையின் அளவுகடந்த அன்பால் திணறும் மகளாக ‘அபியும் நானும்’, விவாகரத்தான பெண்ணாக ஒரு குழந்தைக்குத் தாயாக ‘என்னை அறிந்தால்’ உட்பட பல திரைப்படங்கள் த்ரிஷாவின் அழகையும் நடிப்பையும் செல்லுலாய்டில் அரங்கேற்றின.
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் படிப்போர் அனைவரையும் காதல் கொள்ள செய்த ஒரு கதாபாத்திரம் குந்தவை, காரணம் குந்தவையின் அழகும், அறிவும். இக்கதை திரைப்படமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான போது அந்த அழகுக்கும், அறிவுக்கும் உருவம் கொடுத்தது பேரழகி த்ரிஷாவே. 'பொன்னியின் செல்வன்' நாவலை
படித்து குந்தவையின் உருவத்தை கனவில் சுமந்தோருக்கு குந்தவை இப்படி ஒரு பேரழகியா என சொல்ல வைத்ததும் இந்த குட்டி நிலவே.