தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான பல திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டும் திரையரங்கு வசூலில் சுமார் 1400 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் சில திரைப்படங்கள் திரைத்துறையினரை நினைத்தும் பார்க்காத சாதனைகளை படைத்துள்ளன. அந்த படங்கள் வசூல் நிலவரம் குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் வெளியானது. இந்தப் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இந்த ஆண்டின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் இலக்கை வலிமை எட்டியது. இந்த திரைப்படம் தமிழகத்தில் 104 கோடி வசூல் செய்தது. அதன் மூலம் 52 கோடி ஷேர் தொகை கிடைத்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து வெளியான எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் தமிழகத்தில் நல்ல வசூலை ஈட்டியது. அந்த திரைப்படம் தமிழகத்தில் 85 கோடி ரூபாய் வசூலை கொடுத்தது. இதன் மூலம் 32 கோடி ஷேர் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து வெளியான கே.ஜி.எப்-2 திரைப்படம் தமிழகத்தில் குறைந்த திரையரங்கில் வெளியான போதும், 120 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதன் மூலம் படத்தை வெளியிட்டவர்களுக்கு 48 கோடி ரூபாய் ஷேர் தொகை கிடைத்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 33 கோடி வசூல் செய்தது, இதன் மூலம் 19 கோடி ரூபாய் ஷேர் கிடைத்துள்ளது. இந்த படத்தை 14 கோடிக்கு மினிமம் கேரண்டி அடிப்படையில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டார். ஆனால் அதைத்தாண்டி அவருக்கு 5 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது என்பதை குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியான கமல்ஹாசனின் விக்ரம் தமிழ் திரையுலகில் புதிய சாதனை படைத்தது. அந்த திரைப்படம் ஒட்டு மொத்தமாக 182 கோடி வசூல் செய்தது. அதுவரை எந்த நடிகரும் நிகழ்த்தாத சாதனையை இந்த கமல்ஹாசன், ஃபகத் ஃபசில், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து நிகழ்த்தினர். இதன் மூலம்மட்டும் 92 கோடி ஷேர் தொகை கிடைத்தது. இதை திரைத்துறையினர் பெரும் சாதனையாக கொண்டாடினர்.
இந்த ஆண்டு நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் மற்றும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் இணைந்து 100 கோடி என்ற வசூல் இலக்கை எட்டியுள்ளன. அதில் விருமன் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து 23 கோடி ரூபாய் ஷேர் தொகை கொடுத்தது. அதேபோல் மற்றொரு திரைப்படமான சர்தார் 52 கோடி வசூல் செய்து 24 கோடி ரூபாய் ஷேர் தொகை கொடுத்தது.
இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே 5.5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழகத்தில் 55 கோடி ரூபாய் வசூல் செய்தது இதன் மூலம் 25 கோடி ரூபாய் ஷேர் தொகை கிடைத்ததாக திரை வியாபாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
இந்த படங்கள் அனைத்தும் வசூலில் பல சாதனைகளை படைத்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வசூலில் உச்சத்தை தொட்டது. இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 234 கோடி என்ற வசூல் இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஷேர் தொகையில் 100 கோடி ரூபாய் என்ற இலக்கை எந்த படமும் தொட்டதில்லை. ஆனால் இந்த திரைப்படம் அந்த சாதனையை நிகழ்த்தி சாதனை படைத்தது இதனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் கொண்டாடி வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் சாதனையை முறியடிக்க, அதன் இரண்டாவது பாகத்தால் மட்டுமே முடியும் என சில சினிமாத்துறை வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்தப் படங்கள் தவிர சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் 30 கோடி ரூபாய் வசூலையும் 16 கோடி ஷேர் தொகையையும் கொடுத்தது. அதேபோல் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலையும் 13 கோடி ரூபாய் ஷேர் தொகையும் கொடுத்தது. இவர்களைப் போல சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 28 கோடி ரூபாய் வசூலையும் 15 கோடி ரூபாய் ஷேர் தொகையையும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.