நடிகர் சிவாஜி கணேசனுடன் இந்தப் புகைப்படத்தில் காணப்படும் துறவி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். தமிழக முதலமைச்சராக பதவியேற்றவர். அவர் யார் என்று தெரிகிறதா? இன்று இந்திய அளவில் பேசப்படும் திராவிட மாடல் வளர்ச்சி, திராவிட சித்தாந்தம் அனைத்திற்கும் அடிப்படையாக பலபேர் இருந்திருக்கிறார்கள். அதில் பெரியாருக்கு அடுத்தப்படி முக்கியமானவர் அறிஞர் அண்ணா. திராவிட சித்தாந்தம், திராவிடர் கழகம் என்ற இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது வை தொடங்கி அதனை நாடாளுமன்ற, சட்டமன்ற அரசியலுக்கு கொண்டு வந்தவர் அறிஞர் அண்ணா. தனது திராவிட சித்தாந்தத்தை பரப்ப கலை வடிவங்களை அண்ணா பயன்படுத்தினார்.
அண்ணா எழுதிய நாடகங்களில் முக்கியமானவை வேலைக்காரி மற்றும் ஓர் இரவு நாடகங்கள். நாடகமாக நடிக்கப்பட்டு வந்த இவைகள் பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அதற்கும் அண்ணா தான் திரைக்கதை, வசனம் எழுதினார். அந்தக் காலத்தில் வேலைக்காரி படத்தில் பேசப்பட்ட முற்போக்குக் கருத்துக்களும், அண்ணாவின் வசனங்களும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. நாயகனுக்கு இணையாக கதை, வசனம் என்று அண்ணா பெயர் திரைப்படங்களில் இடம் பெற்றது. அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு நாடகங்கள் மாணவர் பருத்தில் தனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், மொழி மீது அவருக்கிருந்த ஆளுமையும் தனது கருத்துக்களை அவர் முன்வைக்கும் விதத்தையும் கண்டு பிரமித்துப் போனதாகவும் இயக்குனர் கே.பாலசந்தர் கூறியுள்ளார்.
அண்ணா எழுதிய புகழ்பெற்ற மற்றுமொரு நாடகம், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம். இதில், அப்போது வளர்ந்து வரும் நாடக நடிகரான வி.சி.கணேசன் சிவாஜியாக நடித்தார். அதில் காகபட்டராக அண்ணா சின்ன வேடம் ஒன்றில் நடித்திருந்தார். அந்தப் புகைப்படம்தான் இது. ஒருமுறை, சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் நாடகத்துக்கு பெரியார் தலைமைத் தாங்கினார். நாடகத்தை அவர் முழுவதும் ரசித்துப் பார்த்தார். முக்கியமாக சிவாஜியாக நடித்த வி.சி.கணேசனின் ஆக்ரோஷமான நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.