28 வருடங்களுக்கு முன்பு 1994 மே 13 இதே நாளில் தேன்மாவின் கொம்பத்து திரைப்படம் வெளியானது. ப்ரியதர்ஷன் - மோகன்லால் காம்பினேஷனில் அமைந்த படங்களில் 90 சதவீதம் வெற்றி பெற்றவை என்பதால், தேன்மாவின் கொம்பத்து படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை பட வெளியீட்டுக்கு முன்பே இருந்தது. கேரளா- கர்நாடக எல்லைப் பகுதியில் தேன்மாவின் கொம்பத்து கதை நடப்பதாக எடுக்கப்பட்டது.
நெடுமுடிவேணுவின் விசுவாசமான வேலைக்காரர் மோகன்லால். நாடகம் பார்க்க இருவரும் மாட்டு வண்டியில் செல்வது வழக்கம். ஒருமுறை நாடக நடிகை ஷோபனா சந்தர்ப்பவசத்தால் இவர்களுடன் பயணம் செய்கிற சூழல் ஏற்படும். ஷோபனாவின் குடிகார மாமா குதிரவட்டம் பப்பு போதையில் வழிநெடுக கெட்டவார்த்தைகளில் திட்டிக் கொண்டுவர, வண்டியோட்டும் மோகன்லால் தனது எரிச்சலை ஷோபனா மீது காட்டுவார். ஷோபனாவை சமாதானப்படுத்தி நெடுமுடிவேணு பயணத்தை தொடர்வார். நாடக கொட்டகையில் ஏற்படும் கலவரத்தில் மோகன்லாலும், ஷோபனாவும் மாட்டு வண்டியுடன் வழி தெரியாத இடத்தில் மாட்டிக் கொள்வார்கள்.
அங்குள்ளவர்களின் மொழி ஷோபனாவுக்கு தெரியும். மோகன்லாலுக்கு தெரியாது. ஊர் போய் சேரவேண்டும் என்றால் ஷோபனாவின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால், அவரோ மோகன்லாலை சுற்றவிடுவார். அந்த ஊர் மக்களின் மொழியில், முத்தம் கொடு என்று கேட்க, அதன் பொருள் தெரியாத மோகன்லால் அதைப் பேசி ஊர் மக்களிடம் மாட்டிக் கொள்வார். அவரைப் பிடித்து மரத்தில் கட்டி வைப்பார்கள்.
மோகன்லால் தனது கணவர், அவருக்கு மனநிலை சரியில்லை என்று பொய் சொல்லி ஷோபனா அவரை காப்பாற்றுவார். மோகன்லாலை வேண்டுமென்றே ஷோபனா கரித்துக் கொட்டுவார். ஷோபனா சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் மோகன்லால், கிடைத்த அவமானங்களையெல்லாம் சேர்த்து ஷோபனாவை முத்தமிட அவர்களுக்குள் காதல் பற்றிக் கொள்ளும்.
இந்த விவரம் தெரியாத நெடுமுடிவேணு ஷோபனாவை திருமணம் செய்ய தயாராவார். ஷோபனாவுக்கும் மோகன்லாலுக்கும் இடையில் இருக்கும் உறவை இன்னொரு வேலைக்காரரான சீனிவாசன், நெடுமுடிவேணுவிடம் திரித்துக்கூறி நெடுமுடிக்கும், மோகன்லாலுக்கும் இடையில் பகையை மூட்டிவிடுவார். இறதியில் நெடுமுடிவேணு காணாமல் போக, அவரை கொன்று குளத்தில் மோகன்லால் வீசியதாக பொய் சொல்லி, ஊர்க்காரர்களை திரட்டுவார் சீனிவாசன்.
ஊர்க்காரர்கள் அவரை பழி வாங்க முயல்கையில் நெடுமுடிவேணு கே.பி.ஏ.சி. லலிதாவுடன் தோன்றுவார். அவரை திருமணம் செய்து, மோகன்லால், ஷோபனா காதலுக்கு வழிவிடுவார். படத்தின் பெரும் பகுதியை மோகன்லாலின் நகைச்சுவை எடுத்துக் கொண்டது. மீதியில் முதலாளி, வேலைக்காரனின் உணர்ச்சி வெளிப்பாடுகள், பகை மிரட்டல்கள். படம் 150 நாள்களைத்தாண்டி ஓடி, அந்த வருடத்தின் மிகப்பெரிய வசூல் படமாக மாறியது.
இந்தப் படத்தின் ஆரம்பத்தில் வரும் மோகன்லால், ஷோபனா காட்சிகளையும், முதலாளி, தொழிலாளி விஷயத்தையும் எடுத்துக் கொண்டு கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கிய படம் தான் முத்து. தமிழில் நாயகனை வேலைக்காரன் என்று காட்டிவிட முடியாது. ஒருகாலத்தில் அவர்கள் குடும்பம் தான் முதலாளியாக இருந்தது, அவர்கள் விட்டுக் கொடுத்ததால் காலப்போக்கில் தொழிலாளியானார்கள் என்று காட்டியாக வேண்டும்.