இதில் ராஜகுரு நம்பியாரின் மகன் பார்த்திபனாக நடராஜன் நடித்தார். நம்பியாருக்கு மகனை ராணுவத் தளபதியாக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால், மன்னர் எம்ஜிஆரை அந்தப் பதவியில் நியமிப்பார். பார்த்திபன் பகலில் நல்லவனாகவும், இரவில் திருடனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். இளவரசியை மணந்து அரசப் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பது அவனது திட்டம்.
ஆனால், இளவரசி சகுந்தலா எம்ஜிஆர் மீது காதல் கொள்வார். சகுந்தலாவுக்கு நடராஜன் அனுப்பும் கடிதம் மாறிப்போய் மந்திரியின் மகள் மாதுரி தேவியுடம் கிடைக்கும் இருவரும் சந்திப்பார்கள், காதல் கொள்வார்கள். நடராஜனின் காதல் சந்தர்ப்பசமானது என்பது மாதுரி தேவிக்கு தெரியாது. இதனால், நடராஜன்தான் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் என்று எம்ஜிஆர் அரசர் முன்பு நடராஜனை நிறுத்துகையில், கடவுள் சிலைக்குப் பின்புறம் நின்று, நட்ராஜன் குற்றமற்றவர் என பேசி அரசரையும், பிறரையும் நம்ப வைத்து நடராஜனை காப்பாற்றுவார்.
எம்ஜிஆர் நாடு கடத்தப்படுவார். ஆனால், நடராஜனின் குணம் நாய் வால். திருந்தாது. மாதுரி தேவி உறங்கிய பின் தனது கொள்ளைத் தொழிலை தொடர்வார். இளவரசியையும் கடத்துவார். மாதுரி தேவிக்கு ஒருகட்டத்தில் உண்மை தெரிந்து இளவரசியை காப்பாற்றுவார். நடராஜனையும் கொலை செய்வார். ராஜகுரு அரசரை கொலை செய்ய முயற்சிக்கையில் பழி அங்குவரும் எம்ஜிஆர் மீது விழும். மாதுரி தேவி உண்மையைச் சொல்லி எம்ஜிஆர் மீதான களங்கத்தைத் துடைக்க, அவரை நம்பியார் கொலை செய்வார். இறுதியில் எம்ஜிஆரும், இளவரசி சகுந்தலாவும் ஒன்றிணைவார்கள்.
கல்கியின் பார்த்திபன் கனவு வெளியாகி பார்த்திபன் என்ற பெயருக்கு நாயக ஒளிவட்டம் கிடைத்திருந்த காலத்தில், அந்தப் பெயரை வில்லனுக்கு சூட்டி புரட்சி செய்திருப்பார் கருணாநிதி. இப்போதும்கூட பார்த்திபன் என்ற பெயரை வில்லனுக்கு வைக்க துணிய மாட்டார்கள். வாசு, மாசு என்றுதான் வைப்பார்கள். ராகவன், பார்த்திபனெல்லாம் நாயகனுக்குரிய பெயர்கள். மந்திரி குமாரியில் நடராஜனின் நடிப்பு சிறப்பாக இருக்கும். வாராய் நீ வாராய் பாடல் காட்சியும் அவருக்கு வைத்திருப்பார்கள். எமக்குத் தொழில் கற்பனை உலகில் நாட்டுக்கு உழைத்தல் என்ற அவரது வசனம் அந்தக் காலத்தில் மிகப்பிரபலம்.
நடராஜன் பார்வர்ட் ஆர்ட்; பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி சில படங்கள் தயாரித்தார். 1956 வெளியான கோகிலவாணி திரைப்படம் இவர் தயாரித்ததுதான். அவரே நாயகனாகவும் நடித்தார். பிறகு எஸ்.என்.சுந்தரம் இயக்கத்தில் அண்ணன் தம்பி, வள்ளல் குமணன், தாய் போல் பிள்ளை, உயிர் காப்பாள் உத்தமி ஆகிய படங்களைத் தொடங்கினார். இந்த நான்குப் படங்களுமே திரைக்கு வரவில்லை.நடராஜனுக்கு 16 குழந்தைகள். சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் 1983 இயற்கை எய்தினார்.