விவாகரத்து பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்து திரைப்படங்களில் பரபரப்பாக நடித்துவந்த சமந்தாவை மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய் வெகுவாக பாதித்துள்ளது. சமீபத்தில் யசோதா படம் தொடர்பாக அளித்த பேட்டியில், ''நல்ல நாட்களும் மோசமான நாட்களும் என் வாழ்க்கையில் மாறி மாறிவருகின்றன. சில நாட்கள் படுக்கையிலிருந்து எழுவது கூட சிரமமாக இருக்கும். சில நாட்கள் எனக்கு இருக்கும் பிரச்னைகளை எதிர்த்து நான் போராட விரும்புவேன்'' என்று சமந்தா குறிப்பிட்டிருந்தார்.
அந்த வரிசையில் மற்றொரு நடிகையான மம்தா மோகன்தாஸ் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரையுலகில் அறிமுகமாகி தமிழில் சிவப்பதிகாரம், தடையறத் தாக்க, குரு என் ஆளு உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.
விட்லிகோ என்ற சரும நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் மம்தா. ஆட்டோ இம்யூன் பாதிப்பால் ஏற்படும் இந்த நோயின் தாக்கம் என்பது சரும நிறத்திற்கான முக்கிய காரணியான மெலனின் படிப்படியாக குறைவதால், தோலின் நிறம் முழுவதுமாக இழக்கும் அபாயம் உருவாகும். எந்த வகை சருமம் கொண்டவரையும் இந்த நோய் தாக்கக் கூடும்.
தலை, கண், வாய் பகுதிகளில் உடனடியாக தென்படும் தோல் நிற மாற்றங்கள் நாளடைவில் வெண் திட்டுக்களாக மாறும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். கார்டிகோ ஸ்டீராய்டுகள், போட்டோதெரபி எனப்படும் ஒளிக்கதிர் சிகிச்சை, உடலின் வேறு பாகத்தில் இருந்து எடுத்து ஒட்டப்படும் தோல் என சில சிகிச்சைகள் மட்டும் தற்போது விட்லிகோவுக்கு மேற்கொள்ளப்படுகின்றன.