கான் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக ஒரு படம் திரையிட தேர்வாவது மிகப்பெரிய கௌரவமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வருடம் கன்ட்ரி ஆஃப் ஹானர் (country of honour) என்ற புதிய பிரிவை உருவாக்கி, முதல் நாடாக இந்தியாவுக்கு அந்த கௌரவம் அளிக்கப்பட்டது. இந்தியா சார்பில் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தலைமையில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், பா.ரஞ்சித், மாதவன், பூஜா ஹெக்டே, தமன்னா உள்பட ஏராளமான இந்திய திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
கான் சர்வதேச திரைப்பட விழாவில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிரிவில் முதலாவதாக இந்தியா அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதை இந்திய ஊடகங்கள் பெருமிதமாக கொண்டாடித் தீர்த்தன. ஆனால், இதில் கொண்டாட எதுவும் இல்லை என்கிறார்கள். உலக சினிமாவையும், உலக அளவிலான விருதுகளையும் உன்னிப்பாக கவனித்து வரும் விமர்சகர்கள். அவர்கள் அப்படிக்கூற நியாயமான காரணம் உள்ளது.
கான் திரைப்பட விழா என்று நாம் பொதுவாக அழைத்தாலும் அதில் இரு பிரிவுகள் உண்டு. கான் திரைப்பட விழா (Festival du Cannes) மற்றும் கான் திரைப்பட சந்தை (Marche du Film) . கான் திரைப்பட விழாவில் அனைவரும் கலந்து கொள்ள முடியாது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். தங்கப்பனை உள்ளிட்ட மதிப்பு வாய்ந்த விருதுகளுக்கான போட்டிக்கு தேர்வு செய்யப்படும் படங்கள் மட்டுமே அங்கு திரையிடப்படும்.
1994 இல் மலையாள இயக்குனர் ஷாஜி காருண் இயக்கிய ஸ்வாஹம் என்ற படம் கான் போட்டிப் பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு எந்த இந்தியப் படமும் கான் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் திரையிடப்படவில்லை எனவும் விமர்சகர் தமிழ் ஸ்டுடியோ அருண் குறிப்பிடுகிறார். அதாவது கடந்த 28 வருடங்களாக கான் திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ திரையிடலில் ஒரு இந்தியப் படமும் திரையிடப்படவில்லை.
கான் திரைப்பட விழாவில் விருது பெறும் படங்களை தேர்வு செய்ய நடுவர் குழு உண்டு. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கலாச்சார பங்களிப்பை மனதில் கொண்டு தேர்வு செய்யப்படுவர். இந்த வருடம் தீபிகா படுகோன் எட்டு நடுவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பத்மாவத் படத்தின் போது அவருக்கு விடப்பட்ட கொலை மிரட்டல், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவராக நடித்தது, ஹாலிவுட் படங்களில் தலைகாட்டியது ஆகியவற்றை வைத்து அவரை நடுவர்களில் ஒருவராக தேர்வு செய்துள்ளனர்.
1982 இல் மிருணாள் சென் முதல்முறையாக நடுவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு மீரா நாயர், ஷர்மிளா தாக்கூர், அருந்ததி ராய், நந்திதா தாஸ், வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய், சேகர் கபூர் உள்பட பலர் நடுவர்களாக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடம் கான் திரைப்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டவர் தீபிகா படுகோன் மட்டுமே என்கிறார்கள்.
அப்படியானால், ஒன்றிய அமைச்சரும், பிற திரைநட்சத்திரங்களும் கலந்து கொண்டது கான் திரைப்பட விழா இல்லையா? நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல், கான் திரைப்பட விழா என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் அதில் கான் திரைப்பட விழா, கான் திரைப்பட வர்த்தகம் என இரண்டு உண்டு. இந்த இரண்டாவது கான் திரைப்பட வர்த்தகப் பிரிவில் உலகின் எந்த நாட்டுப் படத்தையும், யார் வேண்டுமானாலும் பணம் கட்டி திரையிடலாம். இது உலக அளவில் தங்கள் படங்களை விளம்பரப்படுத்துவதற்கான சந்தை. அதனால்தான் சரவணா ஸ்டோர் முதலாளியின் லெஜென்ட் படத்தின் போஸ்டரை இங்கு வெளியிட்டனர்.
கான் திரைப்பட வர்த்தகப் பிரிவு தொடங்கப்பட்டு 75 வருடங்கள் ஆனதை முன்னிட்டு கன்ட்ரி ஆஃப் ஹனர் என்ற பிரிவை உருவாக்கி, உலகில் அதிகத் திரைப்படங்கள் தயாரிக்கும் நாடு என்றவகையிலும், 75 வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் நாடு மரியாதையிலும்; இந்தியாவை முதல்நாடாக அழைத்திருக்கிறார்கள். இதற்கும் கான் திரைப்பட விழாவுக்கும், அங்கு தரப்படும் எட்டு மதிப்பு வாய்ந்த விருதுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மாதவனின் ராக்கெட்ரி உள்பட ஆறு இந்தியப் படங்கள் இந்த இந்தியன் பெவிலியனில்தான் திரையிடப்பட்டது. ஒன்றிய அமைச்சரும், பிற திரைப்பட பிரபலங்களும் கான் திரைப்பட வர்த்தகத்துக்கு சென்றது மக்களின் வரிப்பணத்தில். அதனால்தான் மாதவன் உள்ளிட்டவர்கள்; இந்தியாவின் பெருமையையும,; பிரதமரின் பெருமையையும் அங்கே நன்றியுணர்வுடன் முன்மொழிந்தனர்.
கான் திரைப்படப் பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்று தேர்வாவதும், அதில் தரப்படும் 8 விருதுகளில் ஒன்றை வெல்வதும்தான் உண்மையான அங்கீகாரமாகும். 1946 இல் வெளியான சேத்தன் ஆனந்தின் இந்திப் படம் நீச்சா நகர் கான் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கப்பனை விருதை வென்றது. அப்போது இந்த விருது Grand Prix du Festival International du Film என்ற பெயரில் வழங்கப்பட்டது. 1982 இல் சத்யஜித் ரே க்கு Hommage à Satyajit Ray என்ற கௌரவ விருது வழங்கப்பட்டது.
கான் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கு இந்தியப் படம் தேர்வு செய்யப்படுவதும், விருது வெல்வதுமே உண்மையான அங்கீகாரம். அதனை 1946 இல் ஒருமுறை இந்திய சினிமா சாதித்தது. அதன் பிறகு சிறப்பு கௌரவ விருதை சத்யஜித் ரே பெற்றார். அதற்குப் பின் யாருடைய படமும் அந்த எல்லைக் கோட்டை எட்டியது இல்லை. மைதானத்துக்கு வெளியே கடைபரப்பிவிட்டு, கான் திரைப்பட விழாவில் பங்கேற்றோம் என்பது வெறும் போங்காட்டம் மட்டுமே.