செவிலியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர் ஜூனியர் பாலய்யா (நந்தமுரி பாலகிருஷ்ணா) மன்னிப்பு கேட்டுள்ளார்.   தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பாலய்யா, அவ்வப்போது சர்ச்சை கருத்து தெரிவித்து, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். முன்பு பலமுறை ரசிகர்களை தாக்கிய விவகாரத்தில் பாலய்யா பரபரப்பாக பேசப்பட்டார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் செவிலியர் குறித்து அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருமுறை காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற பாலய்யா, அங்கு மருத்துவ பணியாளரிடம் தனக்கு காயம் ஏதும் இல்லை, சிகிச்சை வேண்டாம் என்று சொன்னாராம். அங்கிருந்த அழகான நர்சை பார்த்த பின்னர், தானே முன்வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக பாலய்யா தெரிவித்திருந்தார். அவரது பேச்சு வைரலான நிலையில் செவிலியர்கள் சங்கங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தன. இந்நிலையில் தனது கருத்துக்கு பாலய்யா மன்னிப்பு கேட்டுள்ளார். தான் சொன்னதன் அர்த்தம் முற்றிலும் திரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தனது வார்த்தைகள் செவிலியர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பாலய்யா தெரிவித்துள்ளார். பாலய்யாவின் சர்ச்சை கருத்தும், மன்னிப்பு பதிவும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.