சர்வதேச அளவில் திரைத்துறைக்காக வழங்கப்படும் விருதுகளில் ஆஸ்கர் விருது முதல்மையானது. கோலிவுட்டில் இருந்து ஏற்கனவே தெய்வமகன் (1969), நாயகன் (1987), அஞ்சலி (1990), தேவர் மகன் (1992). குருதிப்புனல் (1995), இந்தியன் (1996). ஜீன்ஸ் (1998), ஹேராம் (2000), விசாரணை (2017) போன்ற தமிழ்ப் படங்கள் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த பெருமைமிகு பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது தான் அறிமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’.
சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.ஃஎப்.பி-க்கு வினோத்ராஜ் அளித்துள்ள பேட்டியில் தனது வாழ்க்கை பயணம் குறித்து மனம் திறந்துள்ளார். 32 வயதாகும் அவர் வறுமையை வென்று எவ்வாறு சாதித்தார் எனவும், தனது சகோதரியின் வாழ்க்கையில் இருந்து பெற்ற அனுபவத்தை எவ்வாறு தனது படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதையும் பகிர்ந்துள்ளார்.
என் தந்தை இறந்த போது குடும்ப வறுமையை போக்க 9 வயதில் மதுரை கடைவீதிகளில் பூ விற்பனை செய்யத் தொடங்கினேன். நான் படிக்கவில்லை, எனக்கு ஆங்கிலம் தெரியாது. வாழ்க்கை பயணம் தான் எனக்கு அனைத்தையும் கற்றுத்தந்தது. என் குழந்தை பருவம் தொடங்கி நான் பல்வேறு நகரங்களுக்கும், ஊர்களுக்கும் புலம்பெயர்ந்துள்ளேன். அப்படி ஒரு கட்டத்தில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றி பணியாற்றி வந்தபோது, என்னுடன் பணியாற்றிய பலரும் தங்கள் வாழ்க்கையில் இன்னலை சந்தித்து வருவதை பார்த்தேன். அவர்கள் சொந்த வாழ்க்கையிலும் பணக் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.
மிகவும் குறைந்த வயதில் பலரும் திருமணம் செய்து கொண்டு பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். அந்த அனுபவங்கள் எனக்குள் இருந்து வந்தன. அவர்களின் துயரங்களை வெளிப்படுத்த ஆசைப்பட்டேன். அதற்கு சினிமா ஒரு கருவியாக இருக்கும் என எண்ணினேன். நானும் சினிமாக்காரன் ஆகவேண்டும் என்ற லட்சத்தில் சென்னை வந்து ஒரு டிவிடி கடையில் வேலை பார்த்துக் கொண்டே சினிமாக்கள் பார்த்து வந்தேன். அதன் பின்னர் குறும்படங்களில் அசிஸ்டண்ட் ஆகவும், தியேட்டர்களிலும் பணியாற்றினேன்.
முழு நீள படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்த நேரத்தில் என் சகோதரி தனது கணவர் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு தனது 2 வயது குழந்தையை தோளில் சுமந்துகொண்டு 13 கிமீ நடந்தே எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அந்த வலி, வேதனையால் பாதிக்கப்பட்டேன். அப்போது தான் உணர்ந்தேன், நான் இப்போது சினிமாதுறையில் இருக்கிறேன், என்னால் இந்த வலியை சினிமா மூலம் வெளிப்படுத்த முடியும் என்று.