சுராஜ் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான படம் தலைநகரம். இந்த படத்தில் நாயகனாக சுந்தர் சி ரைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இப்படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள், இருட்டு ஆகிய படங்களை இயக்கிய வி இசட் துரை தான் இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தைப் ஈர்த்துள்ள நிலையில் இந்த ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஆர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த திரைப்படம் கொரோனா காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனைவு திரைக்கதை மூலமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகிறது என பா.ரஞ்சித் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முன்னதாகவே முடிந்துவிட்டதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜிகர்தண்டா 2 படத்தின் அறிமுக டீசர் கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. ஜிகர்தண்டா 2 படத்திற்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த படத்தில் முதன்மை கதாப்பாத்திரங்களில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பேட்ட படத்திற்கு ஒளிப்பதிவு மேற்கொண்ட திருநாவுக்கரசு இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்கிறார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் காவ்யா தபர், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், யோகி பாபு, ஹரிஷ் பேரடி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு இசையமைப்பதுடன் படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனி மேற்கொள்கிறார். இந்த ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது உறுவாகிவருகிறது. ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.முதல் பாகத்தைப்போல, இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். இந்நிலையில் இந்த ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டே துவங்கிய இந்தப் படம் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. மேலும் லைக்காவுக்கும் ஷங்கருக்கும் பட்ஜெட் தொடர்பான முரண் காரணமாகவும் இந்தப் படம் தாமதமானதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக சிக்கல்கள் தீர்ந்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா தயாரிக்கும் இந்தப் பிரம்மாண்ட படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து பாகங்கள் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கியிருந்தார். முதல் பாகம் உலக அளவில் கடந்த வருடம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிசில் ரூ.400 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.