தமிழில் எத்தனையோ திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. எனினும், முதல் வெள்ளி விழா படம் என்பது எப்போதுமே ஒரு தனிச்சிறப்புதான். 1931-ல் பேசத் தொடங்கிய தமிழ் சினிமா 1934-ல் மாபெரும் வெற்றிப் படைப்பை உருவாக்கியது. அதுதான் பவளக்கொடி. தியாகராஜ பாகவதர், மணி பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி ஆகியோர் பவளக்கொடி என்ற நாடகத்தில் முப்பதுகளின் ஆரம்பத்தில் நடித்து வந்தனர். நாடகம் மேடையேறிய இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளிலும் இந்த நாடகம் மேடையேறியது.
இந்த நாடகம் காரைக்குடியில் நடத்தப்பட்ட போது கே.சுப்பிரமணியம், அழகப்பா செட்டியார், எஸ்.எம்.லக்ஷ்மண செட்டியார் ஆகிய மூவரும் நாடகத்தை பார்த்தனர். நாடகம் அவர்களுக்குப் பிடித்துப்போனதால், அதனை திரைப்படமாக்க முடிவு செய்தனர். இந்த மூவருக்கும் திரைப்படமாக பவளக்கொடியை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே தவிர திரைத்துறை அனுவம் குறைவு.
எஸ்.எம்.லக்ஷ்மண செட்டியாரும், அழகப்ப செட்டியாரும் பவளக்கொடியை தயாரிக்க, கே.சுப்பிரமணியம் படத்தை இயக்குவது என முடிவானது. நாடகத்தில் நடித்த தியாகராஜ பாகவதரும், எஸ்.டி.சுப்புலட்சுமியும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சென்னை அடையாறில் காலியிடம் வாங்கி, அதில் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தினர். தற்போது அந்த இடத்தில் டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
பவளக்கொடிக்கு பாபநாசம் சிவன் இசையமைத்தார். படத்தில் மொத்தம் 50 பாடல்கள். இன்று 5 பாடல்கள் இருந்தாலே ரசிகர்கள் தம்மடிக்க சென்றுவிடுவர். அப்போது அதிக பாடல்கள் இருப்பதுதான் ஒரு படத்தின் கௌரவம். இந்த ஐம்பதில் 22 பாடல்களை தியாகராஜ பாகவதரே பாடினார். பவளக்கொடியில் நடிக்க (பாட...?) பாகவதருக்கு அந்தக் காலத்திலேயே நான்காயிரம் ரூபாயும், எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயும் வழங்கப்பட்டன. படத்தை இயக்கிய கே.சுப்பிரமணியம் அதற்கு முன் சில மௌனப் படங்களில் பணிபுரிந்திருந்தார். எனினும் இயக்கம் அவருக்குப் புதிது. இவர் பிறகு பவளக்கொடியில் நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமியை இரண்டாம்தாரமாக மணந்து கொண்டார். இவரது மகள்தான் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம்.
பவளக்கொடி படப்பிடிப்பு சூரிய வெளிச்சத்தில் நடந்தது. மேகமூட்டத்தால் சூரியன் மறைக்கப்படும் போது படப்பிடிப்பு தடைபடும். இதனால், சூரியனுக்காக படக்குழு காத்திருக்கும். சாப்பாட்டு இடைவேளையில் சூரியன் தலைக்காட்டினால், உடனடியாக சாப்பாட்டை அப்படியேப் போட்டு நடிக்க வந்துவிடுவார்கள். இதனால் காக்கைகளுக்கு கொண்டாட்டமாகிப் போனது. படப்பிடிப்புத்தளத்தில் காக்கைகளின் தொந்தரவு அதிகரிக்க, அவற்றை சுட்டு விரட்டுவதற்கு ஜோ என்கிற ஆங்கிலோ இந்தியனை தயாரிப்பாளர் லக்ஷ்மண செட்டியார் நியமித்தார். படத்தின் டைட்டிலில் 'க்ரோ ஷுட்டர்; என்று ஜோவின் பெயரும் இடம்பெறும்.
மகாபாரத கிருஷ்ணன், கர்ணனைச் சுற்றி எழுதப்பட்டது பவளக்கொடி கதை. இதில் பவளக்கொடி என்பது பாஞ்சாலியை குறிப்பது. கிருஷ்ணராக மணி பாகவதரும், கர்ணனாக தியாகராஜ பாவதரும், பாஞ்சாலியாக எஸ்.டி.சுப்புலட்சுமியும் நடித்தனர். 1934 வெளியான படம் மக்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. மொத்தம் 275 தினங்கள் ஓடி, பாகவதரை தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக்கியதோடு, தமிழ் சினிமாவின் முதல் வெள்ளி விழா திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.